லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதனால் சமநிலையில் இருந்த அந்தத் தொடரில் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டரில் ராகுல் 33 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் லோயர் ஆர்டரில் டெய்ல் எண்டர்களை வைத்துக்கொண்டு ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் எடுத்து போராடியும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. இருப்பினும் இந்தியாவின் வெற்றிக்காக வீரனைப் போல் போராடிய ரவீந்திர ஜடேஜா அனைவரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
10க்கு 10 மார்க்:
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜாவுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் கொடுப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஆனால் சோயப் பசீர், ஜோ ரூட் ஆகிய ஸ்பின்னர்கள் பவுலிங் செய்த போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஜடேஜா சில பவுண்டரிகளை அடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“60 – 70 ரன்கள் கொண்ட ஒரு பார்ட்னர்ஷிப் வந்திருந்தால் வெற்றியில் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். இந்தியா அதை செய்யவில்லை. ஜோ ரூட், சோயப் பசீர் பந்து வீசிய போது ஜடேஜா ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவருடைய ஆட்டத்திற்கு முழு மதிப்பெண்கள் கொடுப்பேன். இருப்பினும் சோயப் பசீர் பவுலிங் செய்த போது ஜடேஜா ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்”
கவாஸ்கர் ஆதங்கம்:
“2வதாக ஜஸ்ப்ரித் பும்ராவுடன் சேர்ந்து பேட்டிங் செய்த போது அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் ஸ்டோக்ஸ் உள்வட்டத்திற்கு உள்ளே மிடில் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்தார். எனவே ஜடேஜா அங்கே ரூட் பவுலிங் செய்த போது பவுண்டரி அடித்திருக்கலாம். அதன் பின் சிராஜ் பேட்டிங் செய்த போது ஸ்டோக்ஸ் தன்னைத் தானே பவுண்டரி எல்லை அருகே நிறுத்திக்கொண்டார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் கில் தம்பி.. இங்கிலாந்தின் வெற்றிக்கு நீங்க வெச்ச நெருப்பே காரணம்.. ஸ்டுவர்ட் ப்ராட் மகிழ்ச்சி
மொத்தத்தில் முதல் போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் இந்தியா கைக்கு கிடைத்த வெற்றியை கோட்டை விட்டது என்று சொல்லலாம். இருப்பினும் 3வது போட்டியில் போராடி வெற்றி நழுவ விட்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.



