இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் 3வது போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டெயில் எண்டர்களை வைத்துக்கொண்டு ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்தும் போராடி தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.
அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் பால் ஃரைபல் முதன்மை நடுவராக செயல்பட்டார். ஆனால் பெரும்பாலான தருணங்களில் அவர் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கியது ரசிகர்களை கடுப்பேற்றியது. குறிப்பாக ஜோ ரூட்டுக்கு எதிராக சிராஜ் வீசிய ஒரு பந்து காலில் பட்டதால் இந்திய அணி அவுட் கேட்டது.
அம்பயர் தான் அப்படின்னா:
அப்போது பந்து உயரமாக சென்றிருக்கும் என்று கருதிய அவர் அவுட் வழங்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்தியா ரிவ்யூ செய்த போது ஸ்டம்ப் மேலே பந்து முழுமையாக அடிக்காமல் உரசியது. அதனால் முதன்மை நடுவர் கொடுத்த நாட் அவுட் தீர்ப்பை மீண்டும் 3வது நடுவரும் வழங்கினார். மற்றொரு தருணத்தில் இந்திய கேப்டன் கில் எட்ஜ் கொடுத்ததாக சொல்லி இங்கிலாந்து அணியினர் விக்கெட் கேட்டார்கள்.
அப்போது சற்றும் யோசிக்காத ஃரைபல் இந்திய கேப்டனுக்கு எதிராக அவுட் வழங்கினார். அதை கில் ரிவியூ செய்த போது பேட்டுக்கும் பந்துக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்ததால் 3வது நடுவர் நாட் அவுட் வழங்கினார். அதனால் ஸ்டீவ் பக்னர் போல பால் ஃரைபல் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
டெக்னாலஜியும் சதியா:
அதே போல பால் ஃரைபல் இருக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெறாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக விமர்சித்தார். முன்னதாக அதே போட்டியில் 5வது நாளில் வெற்றிக்கு போராடிய இந்தியாவுக்கு ராகுல் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த 2வது நடுவர் அவுட் வழங்கவில்லை. அதனால் இங்கிலாந்து ரிவ்யூ எடுத்த போது பந்து ஸ்டம்ப்பில் படுவது தெரிந்ததால் 3வது நடுவர் அவுட் வழங்கினார்.
இதையும் படிங்க: முரளிதரன் – வார்னே ஆகியோரில் அவர் தான் உலகின் சிறந்த ஸ்பின்னர்.. ஜாம்பவான் பிரையன் லாரா தேர்வு
அதைப் பார்த்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அம்பயர் தான் இந்தியாவுக்கு எதிராக இருக்கிறார் என்றால் டெக்னாலஜியும் சதி செய்வதாக விமர்சித்தார். இது பற்றி நேரலையில் அவர் கூறியது பின்வருமாறு. “ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பந்து காண்பிக்கப்பட்ட அளவுக்கு பவுன்ஸ் ஆகவில்லை. இதுவே இந்திய பவுலர்கள் பவுலிங் செய்த போது, எடுத்த ரிவியூக்களில் பந்துகள் பெரும்பாலும் ஸ்டம்ப்புக்கு மேலே சென்றன. எனவே இந்த டெக்னாலஜி மீது நான் கேள்வி எழுப்புகிறேன்” எனக் கூறினார்.



