இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை பதிவு செய்தது. அதன் காரணமாக இந்தியா பெரிய பின்னடைவையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதிக்கு பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே தோற்றுள்ள இந்தியா வலுவான ஆஸ்திரேலியாவில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி 2 தொடர்களில் இந்தியா சரித்திர வெற்றி பெற்றது.
ஃபைனல் வாய்ப்பில்லை:
அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறையும் இந்தியா வெல்லும் என்று லேசான நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் எப்படியாவது ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் இந்தியா தொடரை வென்றாலே அது பெரிய விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நடந்தால் நான் நிலாவுக்கு மேலே இருப்பேன். தற்போதைய நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வதை பற்றி நான் பேசமாட்டேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்”
இதுவே பெருசு:
“அது 1 – 0, 2 – 0, 3 – 0, 3 – 1, 2 – 1 என எந்த கணக்கில் இருப்பதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுங்கள். அந்த வெற்றி மட்டுமே மீண்டும் இந்திய ரசிகர்களை நன்றாக உணர வைக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல நியூஸிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சாதாரணமாக தொடரை வெல்வதே பெரிய சாதனையாக இருக்கும்.
இதையும் படிங்க: எல்லாம் 2001ல ஆரம்பிச்சுது.. தோனி, கோலியும் அப்படி தான்.. ஹர்பஜனை வெறுத்தேன்.. பிரட் லீ
ஒருவேளை அந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ கழற்றி விடுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் தான் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்கும் அளவுக்கு மிகவும் மோசமாக விளையாடினார்கள். இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



