தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியை சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்சுகளே முக்கிய காரணமானது.
ஆனாலும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியைச் சந்தித்தது. ஏனெனில் கொல்கத்தாவில் அது போன்ற பிட்ச் வேண்டுமென்று தாங்கள் தான் கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதே சமயம் சவாலான பிட்ச்சில் இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்யத் தவறியது தோல்வியைக் கொடுத்ததாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார்.
கம்பீர் கூற்று சரியே:
அதை பலரும் விமர்சித்த நிலையில் கௌதம் கம்பீர் சொல்வது போல கொல்கத்தா பிட்ச் மேலே தவறில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை பார்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் விளையாடியிருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன்”
“அந்தப் பிட்ச்சில் 124 இலக்கை சேசிங் செய்ய முடியும் என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. பிட்ச் பற்றி நிறைய மக்கள் பேசுகிறார்கள். ஆனால் சைமன் ஹார்மர் வீசிய ஒரு ஓவரில் எத்தனைப் பந்துகள் சுழன்றன? உண்மையில் அவர் பந்துகளை நேராக கலக்கி போட்டார். ஓரிரு பந்துகள் மட்டுமே சுழன்றன. எனவே பிட்ச்சில் தாறுமாறான சுழல் இல்லை. உண்மையில் அது 5வது நாள் பிட்ச் போல இருந்தது”
பவுமா போல:
“அங்கே நீங்கள் பொறுமையைக் காட்டாமல் டி20 போல 3 பந்துக்குப் பின் உங்களுடைய ஷாட்டை அடிக்க முயற்சித்ததே பிரச்சனை. இந்தியாவிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு 124 இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேசிங் செய்திருக்கலாம். எனவே கம்பீர் கருத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பிட்ச்சில் தவறில்லை. 3வது நாளில் ஓரிரு பந்துகள் மட்டுமே திரும்பியது. அது இயற்கையானது. மக்கள் அதை ஸ்பின்னிங் பிட்ச் என்றழைக்கிறார்கள்”
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட்டில் நல்லா ஆடியிருந்தாலும்.. அவருக்கு ஒரு ஆபத்து இருக்கு – தினேஷ் கார்த்திக் கருத்து
“உண்மையில் அது அவ்வளவு தீயதாக இல்லை. மோசமான டெக்னிக், சுபாவம் ஆகியவையே நம்மை இந்த சூழ்நிலையில் நிற்க வைத்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் தெம்பா பவுமாவை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு விளையாடியிருந்தால் வென்றிருக்கலாம். மிகுந்த உறுதி, டெக்னிக், அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் விளையாடிய அவரை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.



