லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. அப்போட்டியின் 3வது நாள் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவும் சரியாக 387 ரன்கள் அடித்ததால் ஸ்கோர் சமநிலை பெற்றது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 100, ஜடேஜா 72, ரிஷப் ஃபண்ட் 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் 3வது நாள் மாலையில் இங்கிலாந்து 2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஐபிஎல் தான் காரணம்:
அப்போது 2வது ஓவரை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். குறிப்பாக பும்ரா வீசிய ஒரு பந்து அவருடைய கையில் லேசாக மட்டுமே பட்டது. ஆனால் அப்போது பெரிய காயத்தைப் போல் வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து அணியின் மருத்துவரை வரவைத்து நேரத்தை முடித்தார்.
அதன் காரணமாக கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே போல இந்திய வீரர்களும் பென் டாக்கெட், கிராவ்லியை சூழ்ந்து கொண்டு காரசாரமாக பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து வீரர்களின் இந்த சண்டைக்கு ஐபிஎல் தான் காரணம் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் கருத்து:
ஏனெனில் தற்போதைய இங்கிலாந்து அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாததால் இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்ட விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அதை கடைசி ஓவராக மாற்ற விரும்பினார்கள். இந்தியர்கள் அது ஒரு விளையாட்டுத் திறன் என்று நினைத்தார்கள்”
“இப்படி நடந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில் ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகள் அளவுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாததால் ஏற்பட்டது என்பது என்னுடைய சிந்தனை. தற்போதைய இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ரூட் போன்ற பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை. மற்ற வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் நடக்கும் போது இந்திய வீரர்களுடன் கலந்து பயணித்து, அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்”
இதையும் படிங்க: 450 ரன்ஸ்.. அண்டர்-19 டெஸ்டிலும் இங்கிலாந்தை நொறுக்கும் ஜூனியர் இந்தியா.. சிஎஸ்கே ஆயுஷ் மாத்ரே அபாரம்
“ஐபிஎல் வரும் முன் வீரர்களுக்கிடையே மிருகத்தனம், எல்லை மீறிய விரோதம் இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு ஆர்ச்சர் பந்து வீசுவது போல அந்த தீவிரம் இன்னும் இருக்கிறது. எனவே ஐபிஎல் தொடரில் விளையாடாததால் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.



