450 ரன்ஸ்.. அண்டர்-19 டெஸ்டிலும் இங்கிலாந்தை நொறுக்கும் ஜூனியர் இந்தியா.. சிஎஸ்கே ஆயுஷ் மாத்ரே அபாரம்

Ayush Mhatre
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்டர்-19 இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 3 – 2 என்ற கணக்கில் அத்தொடரில் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இளம் இந்தியா அசத்தியது. அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி பெக்கன்ஹம் மைதானத்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அண்டர்-19 அணிக்கு ஒருநாள் தொடரில் அடித்து நொறுக்கிய சூரியவன்சி 14 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் கேப்டன் ஆயுஷ் மாத்ரே நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விகான் மல்கோத்ரா சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

ஆயுஷ் அபாரம்:

2வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் ஆயுஷ் சதத்தை அடித்து 14 பவுண்டரி 2 சிக்சருடன் 102 ரன்கள் குவித்து அவுட்டானார். உள்ளூரில் மும்பை அணிக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடிய அவர் அனைவருடைய கவனத்தை ஈர்த்தார்.

அதன் காரணமாக இத்தொடரில் கேப்டனாக வாய்ப்பைப் பெற்ற அவர் தற்போது சதத்தை அடித்து தன்னுடைய தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடிய மல்கோத்ரா 67 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பிய நிலையில் அடுத்ததாக வந்த மௌலியராஜ் சிங் 11 ரன்னில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ராகுல் குமார் மற்றும் அபிஜான் குண்டு ஆகியோர் ஜோடி சேர்ந்த இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஜூனியர் அணியும் மிரட்டல்:

5வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து இந்தியாவை 400 ரன்கள் தாண்ட உதவினர். அந்த ஜோடியில் சதத்தை நெருங்கிய குண்டு 90 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல் குமார் 85 (81) ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்ததாக வந்த முகமது எனான் 23 ரன்கள் அடித்து அவுட்தானார்.

இதையும் படிங்க: 6 ஃபீல்டர்ஸ் வெச்சு 60%.. இங்கிலாந்தின் மட்டமான செயலை ஐசிசி சேர்மேன் கங்குலி அடக்கனும்.. கவாஸ்கர் கோரிக்கை

இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 450/7 ரன்கள் குவித்து அபார துவக்கத்தைப் பெற்றுள்ளது. களத்தில் ஹெனில் படேல் 6*, அம்ரிஸ் 31* ரன்களுடன் உள்ளனர். ஏற்கனவே சீனியர் டெஸ்டில் இளம் இந்திய அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை துவம்சம் செய்து 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே போல தற்போது ஜூனியர் இந்திய அணியும் இங்கிலாந்தை நொறுக்கி வருகிறது.

Advertisement