இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் 2007க்குப்பின் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007 முதல் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வருகிறது.
அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இப்திகார் அலிகான் பட்டோடி அவர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்கும் விளையாடிய ஒரே வீரராக சாதனை படைத்தவர். அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி 1960 – 1970 காலகட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்குமே பட்டோடி குடும்பம் கிரிக்கெட்டில் நிறைய பங்காற்றியுள்ளது.
நன்றியை மறக்காதீங்க:
அதை கௌரவிக்கும் வகையில் 2007ஆம் ஆண்டு பட்டோடி கோப்பையை இங்கிலாந்து வாரியம் அறிமுகப்படுத்தியது. அது இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு பரிசாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை போல தற்காலத்தில் இருக்கும் இந்தியா – இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை இங்கிலாந்து வாரியம் உருவாக்க உள்ளதாக தெரிகிறது.
அதனால் பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி பட்டோடி குடும்பம், பிசிசிஐக்கு இங்கிலாந்து வாரியம் தகவல் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அதை பிசிசிஐ மற்றும் இந்தியர்கள் ஏற்கக்கூடாது என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கவாஸ்கர் சாடல்:
“பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி பிசிசிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது இந்தியா இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது”
இதையும் படிங்க: 3 – 0க்கு தோல்வி.. 15% சம்பளம் அபராதம்.. தக்காளி வியாபாரிக்கு கூட நல்லா தெரியும்.. பாகிஸ்தானை விளாசிய பசித் அலி
“சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும். இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்” என்று கூறினார்.



