ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற உள்ளது. 2017க்குப்பின் நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனைகளால் தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்திய அணி தோனி தலைமையில் வென்றது.
அதன் பின் தற்போது 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்து ஜஸ்ப்ரித் பும்ரா விளையாட உள்ளார். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி மீண்டும் விளையாட உள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் வெல்லும்:
இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளில் உள்ளூர் அணியை தோற்கடிப்பது எப்போதும் கடினம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“தொடரை வெல்லக்கூடிய அணி என்ற பெயரை சொந்த மண் அணியான பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடும் அணியை அவர்களது ஊரில் நிலவும் சூழ்நிலையில் எந்த எதிரணியும் வீழ்த்துவது கடினம். 2023 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்தது”
துபாயில் வேகம்:
“ஆனால் அதற்கு முன்பு வரை தெளிவாக விளையாடிய அவர்கள் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றார்கள். அந்த வகையில் அடுத்து வரும் தொடரில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். இருப்பினும் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுவதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 752 ரன்ஸ் அடிச்சு அற்புதம் செஞ்சுருக்காரு.. ஆனாலும் கருண் நாயரை கழற்றி விட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்
எனவே அங்கு வேகப்பந்து வீச்சுத் துறையில் பலமாக இருந்தால் வெல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துபாய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஆதரவை பெறுவார்கள். பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும். நல்ல பவுன்ஸ் கிடைக்கும். எனவே நல்ல வேகப்பந்து வீச்சு கூட்டணி இருக்கும் அணி வெல்லலாம். அதற்கு தகுந்தார் போல் அணியை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்று கூறினார்.



