IND vs AUS : வேணும்னா பாருங்க 2வது டெஸ்டில் அவரோட சொந்த ஊர்ல கம்பேக் செஞ்சூரி அடிக்கப்போறாரு – கவாஸ்கர் கணிப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் துவங்கிய வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்தியா நாக்பூர் பிட்ச் பற்றி ஆஸ்திரேலியா முன்வைத்த குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து சதமடித்த ரோகித் சர்மா பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Kohli

- Advertisement -

இருப்பினும் கிட்டத்தட்ட 3 வருடங்களாக சதமடிக்காமல் இருந்த கதைக்கு 2022 ஆசியக் கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து முற்றுப்புள்ளி வைத்து சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த அவர் அடுத்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்ததால் அணியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வீரர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

சொந்த ஊரில்:
இருப்பினும் கடந்த வருடம் அந்த அனைத்து விமர்சனங்களையும் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பி விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் சதமடிக்காமல் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுழல் பந்து வீச்சில் தடுமாறிய அவர் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் முதல் போட்டியில் தடுமாறினாலும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தனது சொந்த ஊரான டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் விராட் கோலி சதமடிப்பார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் அவருக்கு ஒரு மோசமான இன்னிங்ஸ் அமைந்தது. இருப்பினும் இத்தொடரில் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளது. அவரைப் போன்ற வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்களை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் ரசிகர்களிடம் இருக்கும். ஆனால் அது ஒரு மோசமான இன்னிங்ஸாக மட்டுமே அமைந்தது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய கம்பேக் சதம் அவருடைய சொந்த ஊரான டெல்லியில் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல என்ன தான் இந்தியாவில் இருக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் பிறந்து வளர்ந்து கிரிக்கெட் விளையாட பழகிய சொந்த ஊரான டெல்லியில் விளையாடுவது நிச்சயமாக விராட் கோலிக்கு எக்ஸ்ட்ரா ஆதரவையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் என்று சொல்லலாம்.

Gavaskar

சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இரட்டை சதமடித்து 243 ரன்கள் குவித்து தனது கேரியரில் சிறந்த ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார். எனவே தற்போது பார்முக்கு திரும்பி ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 4 சதங்களை அடித்துள்ள விராட் கோலி தன்னுடைய சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நீண்ட நாட்களாக அடம் பிடித்து வரும் சதத்தை அடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: தோனியின் அந்த முடிவு தான் அவரோட கேரியரை காப்பாத்திருக்கு – இந்திய வீரரை பாராட்டிய இயன் சேப்பல்

இதைத்தொடர்ந்து 2வது போட்டி நடைபெறும் டெல்லி மைதானத்திற்கு ஏற்கனவே பயணித்துள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் அங்கு தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement