இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட்டாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதமடித்து அசத்தினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் இரண்டாவது போட்டியில் அதே போல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
எனவே விராட் கோலி மீண்டும் அசத்துவதற்கு 2004 சிட்னி போட்டியில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை முற்றிலும் தவிர்த்து தமக்குப் பிடித்த கவர் ட்ரைவ் அடிக்காமலேயே 241* ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரை பின்பற்ற வேண்டுமென ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் விராட் கோலிக்கு மற்றொரு ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் அதே ஆலோசனை வழங்கியுள்ளார்.
கவாஸ்கர் அட்வைஸ்:
குறிப்பாக நன்கு செட்டிலாகும் வரை அந்தப் பந்துகளை தவிர்த்து பின்னர் கவர் டிரைவ் அடிக்க முயற்சி செய்யுங்கள் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “இந்த அணுகுமுறை ஆரம்பத்தில் இருக்க வேண்டும். நீங்கள் செட்டிலாகாத வரை அதை அடிப்பதற்கு செல்லக்கூடாது. முதலில் இன்னிங்ஸில் அவர் அடித்த ஷாட் மேலே சென்றது”
“தற்போது அதை ஆஸ்திரேலிய வீரர்கள் கவனித்துள்ளார்கள். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட வரும் போது அங்கே விராட் கோலிக்கு எதிராக ஃபீல்டரை நிறுத்துவார்கள். எனவே அவர் அதை கையாள வேண்டும். சச்சின் டெண்டுல்கர் போல நேராகவும், மிட் ஆன், மிட் ஆஃப் திசைகளில் அடிப்பதற்கு மட்டும் கவனம் செலுத்த வேண்டும்”
சச்சின் போல:
“அத்தொடரில் முதல் 3 போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் பந்துகளில் சச்சின் அவுட்டானார். அதனால் சிட்னியில் ஒரு கவர் ட்ரைவ் கூட அடிக்காத சச்சின் தம்மை தாமே கட்டுப்படுத்திக் கொண்டு கிட்டத்தட்ட 250 ரன்கள் குவித்தார். ஒருவேளை அதே போல விராட் கோலியும் விளையாடினால் சச்சின் டெண்டுல்கர் போல இரட்டை சதத்தை அடிக்கலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஃபார்மை பாக்காதீங்க.. 3வது டெஸ்டில் கம்பேக் கொடுக்க நானா இருந்தா இதை செய்வேன்.. ரோஹித்துக்கு பாண்டிங் அட்வைஸ்
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அதை அடுத்து மூன்றாவது போட்டி ப்ரிஸ்பேன் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.



