ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் 2011 போல வென்று சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார். அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி ஒரு வழியாக கடந்த வருடம் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார்.
அதில் அயர்லாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து அசத்திய அவர் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் தம்மால் அசத்த முடியும் என்பதை நிரூபித்தார். ஆனால் வழக்கம் போல அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது.
கவாஸ்கர் அட்வைஸ்:
அந்த நிலையில் துரதிஷ்டவசமாக அவர்கள் இருவரும் காயமடைந்து வெளியேறியதால் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அரை சதமடித்து நன்றாகவே செயல்பட்ட அவர் டி20 தொடரில் சொதப்பினார் என்பதற்காக ஆசிய கோப்பையில் கழற்றி விடப்பட்டு உலகக்கோப்பையிலும் கண்டு கொள்ளப்படவில்லை.
ஆனால் அவரை விட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே மோசமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவுக்கு உலகக்கோப்பை அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சூரியகுமாரை விட ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரியை கொண்டிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி, சுப்மன் கில் போன்றவர்களைப் போல் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பெரும்பாலும் தொடர்ந்து ரன்கள் அடித்தால் மட்டுமே சஞ்சு சாம்சன் தாமாக இந்திய அணியில் நிலையான வாய்ப்பை பெற முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது 15 பேர் கொண்ட அணியாகும். எனவே அதில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதனால் சஞ்சு சாம்சன், அஸ்வின், சஹால் போன்றவர்கள் இந்த அணியில் தேர்வாக அதிர்ஷ்டமில்லை என்று கருத வேண்டும். ஏனெனில் இதில் ஏற்கனவே 15 சிறப்பான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: உலகக்கோப்பை தொடரில் இவரே இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருப்பார் – வாசிம் ஜாபர் நம்பிக்கை
“குறிப்பாக சஞ்சு சாம்சன் போன்றவர் தொடர்ந்து பெரிய பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே அணியில் ஆட்டோமேட்டிக் தேர்வாக இருப்பார். என்னைக் கேட்டால் இது தான் அவர் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கான ஒரே வழியாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கிடைக்கும் வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு பொன்னாக மாற்றுவதில்லை என்ற விமர்சனம் மற்றொரு தரப்பினர் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.