அட்லீஸ்ட் அவரை செலக்ட் பண்ணிருக்கலாம்.. ரொம்ப காலமாவே தமிழ்நாட்டு பிளேயர்ஸ்க்கு இது நடக்குது.. பத்ரிநாத் வேதனை

Subramanyam Badrinath
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக், நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், வாசிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர்.

அதில் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியில் கடைசி நேரத்தில் களமிறங்கி நல்ல ஃபினிசாராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அவரை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஹைதராபாத் அணியில் 7 போட்டியில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ள நடராஜன் சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

பத்ரிநாத் வேதனை:
இருப்பினும் இதே ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் நடராஜனை விட குறைந்த விக்கெட்டுகள் எடுத்து அதிக எக்கனாமியில் சுமாராக பந்து வீசி வருகின்றனர். மறுபுறம் கிட்டத்தட்ட பும்ரா போல துல்லியமான யார்கர் பந்துகளை வீசக்கூடிய நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது கூடுதல் ஸ்பெஷலாகும்.

ஆனாலும் சிராஜ் போன்றவரை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு நடராஜனை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்காதது தமிழக ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது. இந்நிலையில் தம்முடைய காலத்திலிருந்தே தென் மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதனால் தமிழக வீரர்கள் இரு மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியுள்ளது பின்வருமாறு. “2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இருந்திருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது? தனிபட்ட முறையில் நானும் இந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளேன்”

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கே.எல் ராகுல்.. லக்னோ அணி நிர்வாகம் போட்ட எமோஷனல் பதிவு

“இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தேர்வுக் குழுவில் இருந்தும் இது பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் மூத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கழற்றி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement