ஸ்டம்ப் மைக்கில் அம்பலமான பாண்டியா உண்மை முகம், திலக் வர்மாவை நம்ப வைத்து ஏமாற்றிய பரிதாபம் – புதிய வீடியோவ பாருங்க

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அப்போட்டியில் ப்ரெண்டன் கிங் 42, கேப்டன் ரோவ்மன் போவல் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 159/5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் இந்த தொடரில் முதல் முறையாக அதிரடி காட்டிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 83 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஸ்டம்ப் மைக்கில் அம்பலம்:
அவருடன் 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 (37) ரன்களும் கேப்டன் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே 164/3 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் திலக் வர்மாவை 50 ரன்கள் அடிக்க விடாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா தடுத்து சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது 18வது ஓவரின் 4வது பந்தில் 49 ரன்களை தொட்ட திலக் வர்மா இந்த தொடரில் தான் அறிமுகமாகி முதலிரண்டு போட்டிகளில் இதர பேட்ஸ்மேன்கள் திண்டாடிய போது சவாலான பிட்ச்சில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அப்படி திறமையான இளம் வீரராக இருக்கும் அவருக்கு 5வது பந்தில் சிங்கிள் எடுத்து கடைசி பந்தில் 50 ரன்களை தொடும் வாய்ப்பை கேப்டனாக பாண்டியா கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அதை செய்யாத பாண்டியா அதிரடியான சிக்சர் அடித்து தனது பெயரில் ஃபினிஷிங் செய்து சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கேப்டனாக அணியின் நலன் கருதி ஒரு இளம் வீரருக்கு வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படும் உத்வேகத்தை கொடுக்கக்கூடிய 50 ரன்கள் தொடுவதற்கு வழி விட்டால் என்ன? என்று ரசிகர்கள் அவரை வெளிப்படையாகவே திட்டி வருகின்றனர். அதே போல 2 ரன்களை எடுக்க 14 பந்துகள் மீதமிருந்த போது இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிக்சர் அடிக்க இது என்ன உலக கோப்பையா அல்லது ரன் ரேட்டுக்காக விளையாடுகிறோமா என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் அந்த போட்டியில் 23 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் திலக் வர்மா 44 (32) ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது “நீ கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டும். எத்தனை பந்துகளை எதிர்கொண்டாய் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியில் திலக் வர்மாவிடம் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. அதாவது போட்டியை “நீயே ஃபினிஷிங் செய்” என்று ஆரம்பத்திலேயே அவரிடம் பாண்டியா வாக்கு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : இந்த மாதிரி ஷாட்களை விளையாட நான் தனியா பிராக்டீஸ் பண்றேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

அதை நம்பி அவரும் ஃபினிஷிங் செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில் அடுத்த சில பந்துகளிலேயே அதிரடியான சிக்ஸர் அடித்த பாண்டியா போட்டியை முடித்து விட்டார். இதிலிருந்து வெற்றிக்காக போராடிய ஒரு இளம் வீரரை நம்ப வைத்து ஏமாற்றும் வகையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டது தெளிவாக தெரிய வருகிறது. அதனால் 2014 டி20 உலக கோப்பையில் ஃபினிஷிங் வாய்ப்பை விராட் கோலியிடம் கொடுத்த தோனியை போல் நீங்கள் எப்போதுமே வர முடியாது என்றும் உங்களை போல் சுயநலமான கேப்டனை பார்த்ததில்லை என்றும் ரசிகர்கள் மேலும் கொந்தளிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement