
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியானது தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடியிருந்த பும்ரா அந்த தொடரின் கடைசி போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சில முக்கிய தொடர்களை தவறவிட்டு பின்னர் ஐபிஎல் தொடரின் போது தான் கம்பேக் கொடுத்திருந்தார்.
எனவே இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே நிர்வாகம் அறிவித்து விட்டது. ஒருவேளை பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடினால் மீண்டும் அவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அவரை ஜாக்கிரதையாக கையாள நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆனாலும் ஜஸ்ப்ரீத் பும்ராவை எவ்வாறு பயன்படுத்தினால் 5 போட்டிகளிலும் விளையாட வைக்க முடியும் என்பது குறித்து பலரும் தங்களது யோசனைகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடக் கூடாது என்றும் அப்படி விளையாடுவதை இங்கிலாந்து அணியும் விரும்பாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய உலகின் மிகச்சிறந்த பவுலர் என்றால் அதில் சந்தேகமே இல்லாமல் என் மனதிற்கு வருபவர் பும்ரா தான். ஏனெனில் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போதே அவர் எப்பேர்ப்பட்ட பவுலர் என்பதை நிரூபித்து விட்டார். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது சிறப்பான பந்துவீச்சால் திணறடிக்கும் அவர் இங்கிலாந்திலும் தனது திறனை கண்டிப்பாக வெளிப்படுத்துவார்.
இதையும் படிங்க : சிங்கத்தோட குகைக்குள்ள போறாரு.. புதிய கேப்டன் சுப்மன் கில்லை எச்சரித்த – தினேஷ் கார்த்திக்
எனவே அவர் குறைந்த போட்டியில் மட்டுமே விளையாடினால் அது இங்கிலாந்து அணிக்கு நல்லது. ஒருவேளை அவர் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட நேர்ந்தால் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் தான் இருப்பார். எனவே அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட இங்கிலாந்து அணியின் வீரர்களே விரும்ப மாட்டார்கள் என ஸ்டூவர்ட் பிராடு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.