ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்குள்ளானாலும் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. அதே போல மீண்டும் சிறப்பாக செயல்பட்டு போராடிக் கொண்டு வந்த 4வது போட்டியின் வெற்றியை மழை தடுத்தது. அதனால் அப்போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கௌரவத்தை தக்க வைத்து அசத்தியது. அந்த நிலைமையில் ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய கடைசி போட்டியில் ஆஷஸ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா போராடி 295 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 389/9 ரன்கள் எடுத்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
விடைபெறும் லெஜெண்ட்:
அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்களை எடுத்தார். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் 3வது நாள் முடிவில் இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்து அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக தற்போது களத்தில் 2* ரன்களுடன் இருக்கும் அவர் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் ஆஷஸ் தொடரில் தம்முடைய கடைசி பேட்டில் வரும் ரன் மற்றும் விக்கெட்டை எடுத்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறுவது பற்றி கடந்த சில வாரங்களாக யோசித்து வந்த முடிவை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக கூறினார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாளை அல்லது திங்கட்கிழமை தான் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி போட்டியாகும். நாட்டிங்கம் மற்றும் இங்கிலாந்துக்காக விளையாடிய இந்த பயணம் அற்புதமாக இருந்தது. எப்போதுமே கிரிக்கெட்டை விரும்பும் நான் ஆஷஸ் போன்ற தொடரில் என்னுடைய கேரியரை உச்சமாக முடிக்க விரும்பினேன். இந்த முடிவை பற்றி கடந்த சில வாரங்களாகவே யோசித்து வந்த நான் நேற்று இரவு 8.30 மணியளவில் இறுதியாக எடுத்தேன்”
“ஏனெனில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் தொடரே என்னை பொறுத்த வரை மிகப் பெரியதாகும். குறிப்பாக நான் அதிகமாக விரும்பும் ஆஷஸ் தொடரில் என்னுடைய கடைசி பேட்டிங் மற்றும் பவுலிங் இருப்பதை விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளேன்” என கூறினார். கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டுவர்ட் ப்ராட் ஆரம்ப காலங்களில் இளம் வீரராக தடுமாறினாலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பைப் பெற்று அசத்தினார்.
இருப்பினும் 2007 டி20 உலக கோப்பையில் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் வம்பிழுத்ததற்கு பலிகாடாக யுவராஜ் சிங்கிடம் 6 சிக்ஸர்களை கொடுத்து மோசமான உலக சாதனை படைத்த அவருடைய வெள்ளைப்பந்து கேரியர் அப்போதிலிருந்தே மங்கத் துவங்கியது. ஆனாலும் மனம் தளராமல் போராடி 2010 டி20 உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றிய அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 243 விக்கெட்களை எடுத்தார்.
இதையும் படிங்க:ஆஷஸ் தொடருடன் திடீரென ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நட்சத்திர பவுலர் – சொதப்பல் வீரராக துவங்கி லெஜெண்ட்டாக பிரியாவிடை
அப்படியே காலங்கள் உருண்டோட நிலையில் 2014க்குப்பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அனுபவத்தால் அசத்தி 167 போட்டிகளில் 602* விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட்களை எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்று சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் யுவராஜ் சிங்கிடம் அடி வாங்கிய போது ஜீரோவாக பார்க்கப்பட்ட அவர் தற்போது 37 வயதில் 845 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து ஜாம்பவானாக விடை பெறுவதால் உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.