இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றது. குறிப்பாக 2018/19 சீசனில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாறு படைத்தது. அதே போல 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது.
அத்தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து 3வது போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றியுடன் பதிலடி கொடுத்தது. ஆனால் 4வது போட்டியில் மீண்டும் இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தியாவின் மாஸ் வெற்றி:
இறுதியில் லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசிப் போட்டி 2022இல் நடத்தப்பட்டது. அப்போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்த இங்கிலாந்து தொடரை சமன் செய்தது. இதைத்தொடர்ந்து 2025 ஜூன் மாதம் மீண்டும் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவே இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் கூறியுள்ளார்.
அத்துடன் 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவிடம் தோற்றது இங்கிலாந்துக்கு பெரிய வலியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 2025 தொடர் 2 – 2 (5) என்ற கணக்கில் டிராவில் முடிவடையலாம் என்று கணிக்கும் ப்ராட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வென்ற போது இங்கிலாந்து சந்தித்த வலியை குறைத்து மதிப்பிடாதீர்கள்”
2 – 2 என்ற கணக்கில்:
“அந்த அதிரடியான டெஸ்ட் போட்டியில் சிராஜ் கடைசி நாளில் அற்புதமாக பந்து வீசினார். அது பார்க்க அற்புதமான உணர்வுபூர்வமான போட்டியாக இருந்தது. அந்தத் தோல்வி இங்கிலாந்து அணிக்கு எவ்வளவு வலியைக் கொடுத்தது என்பது எனக்குத் தெரியும். அதற்கு சமமாக இந்திய அணியினர் மற்றும் விராட் கோலியின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. அது விராட் கோலிக்கு பெரிய வெற்றி”
இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித்துக்கு ஸ்பெஷல் பேட்டை பரிசாக கொடுத்த மெஹதி ஹசன்.. வாழ்த்திய ஜாம்பவான்கள்
“எனவே இம்முறை இங்கிலாந்து – இந்திய அணிகள் தொடர் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது விராட் கோலியின் கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணமாக இருக்கலாம். இந்திய அணி ஆழமான திறமை கொண்டுள்ளது. இங்கிலாந்து கொஞ்சம் இளமையான அணியாக இருக்கிறது. ஆனால் முன்னோக்கி விளையாடும் ஸ்டைலில் அவர்கள் நிறைய திறமையைக் கொண்டுள்ளனர். இம்முறை வானிலையை விளையாடினால் அந்தத் தொடர் 2 – 2 என்ற கணக்கில் முடிவடையலாம்” என்று கூறினார்.



