வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்தியா ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்தத் தொடர் முடிவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை வங்கதேச வீரர் மெஹதி ஹசன் சந்தித்தார். அப்போது தன்னுடைய நிறுவனத்தின் பேட்டை ரோஹித் சர்மாவுக்கு அவர் பரிசாக கொடுத்தார். அதாவது “எம்கேஎஸ்” என்ற பெயரில் வங்கதேசத்தில் மெஹதி ஹசன் ஒரு பேட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
வாழ்த்திய ரோஹித் சர்மா:
அந்த நிறுவனத்தின் ஒரு உயர்தரமான பேட்டை அவர் ரோகித் சர்மாவுக்கு கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் ரோகித் பாயுடன் உள்ளேன். என்னுடைய நிறுவனத்தின் ஒரு பேட்டை அவருக்கு நான் பரிசளிக்கிறேன். அவருக்கு பேட்டை கொடுக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். தற்போது அதை செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
அதைப் பெற்றுக் கொண்ட ரோகித் சர்மா அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது பின்வருமாறு. “மெஹதி பற்றி எனக்கு நீண்ட காலமாக தெரியும் அவர் நல்ல கிரிக்கெட்டர். தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து எனது சொந்த பேட் நிறுவனத்தை அவர் துவங்கியுள்ளதற்காக பெருமைப்படுகிறேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவருக்கு கடவுள் ஆசிர்வாதம் மற்றும் வெற்றிகளை கொடுக்கட்டும். இந்த நிறுவனம் உயரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
பெங்காலியில் வாழ்த்திய கோலி:
அதே போல விராட் கோலிக்கும் தமது நிறுவனத்தின் பேட்டை மெஹதி ஹசன் பரிசாக கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட விராட் கோலி பெங்காலி மொழியில் சில வார்த்தைகளை சொல்லி மனதார பாராட்டினார். இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் நன்றாக இருக்கிறது (பெங்காலியில்). உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் இந்த வேலையை தொடருங்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கொண்டாட்ட கோபத்துல ஸ்க்ரீனை அடிச்சாரு.. அத்தோடு தோனியின் ஐபிஎல் கனவும் உடைஞ்சுது.. ஹர்பஜன் பேட்டி
அந்த வகையில் தம்முடைய நிறுவனத்தின் பேட்டை இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பரிசாக கொடுத்து அவர் வாழ்த்து பெற்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த பரிசை கொடுத்ததன் வாயிலாக மெஹதி ஹசன் தம்முடைய நிறுவனத்தைப் பற்றி பலருக்கும் தெரியப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் டி20 தொடரில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.



