இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அந்தப் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்களை அடித்து இந்தியா அபார சாதனை படைத்தது.
இருப்பினும் 7 கேட்ச்களை தவற விட்டதும் பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்யத் தவறியதும் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. அதே போல பௌலிங் துறையில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாதது தோல்வியை உறுதி செய்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தவறான அணியை தேர்ந்தெடுத்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவிக்கின்றார்.
தவறான செலக்சன்:
இதற்கிடையே இரண்டாவது போட்டியில் பணிச்சுமை காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. எனவே இரண்டாவது போட்டியில் சர்துள் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பிராட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்தியா தங்களுடைய அணியை தவறாக தேர்ந்தெடுத்தது என்று நினைக்கிறேன். தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் லீட்ஸ் மைதானம் கடைசி நாளில் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அங்கே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டு ஸ்பின்னருக்கு எதிராக தடுமாறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்”
ப்ராட் விரும்பும் மாற்றங்கள்:
“அது போன்ற சூழ்நிலையில் குல்தீப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார். ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா 2வது போட்டியில் ஓய்வு எடுத்தால் நான் அர்ஷ்தீப் சிங்கை அணிக்குள் கொண்டு வர விரும்புவேன். இடது கை பவுலரான அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து இந்தியாவின் பௌலிங் அட்டாக்கில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார். பிரசித் கிருஷ்ணா கடந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னேற்றத்தைக் காண்பித்தார்”
இதையும் படிங்க: 60 நொடி, 35 ஓவருக்கு பின் 1 பந்து உட்பட.. கிரிக்கெட்டில் 10 புதிய விதிமுறைகளை அறிவித்த ஐசிசி
“இந்திய அணியின் பவுலிங் துறை கட்டுப்பாடு மற்றும் விக்கெட் எடுக்கும் அச்சுறுத்தலில் தடுமாறுகிறது. இருப்பினும் இது பதற்றம் அடைவதற்கான நிலையங்கள் கிடையாது. ஒரு தோல்விக்காக நீங்கள் உங்களுடைய திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமும் கிடையாது. முதல் போட்டியில் பெரும்பாலான நேரங்களை இந்தியா தங்களுடைய கட்டுப்பாட்டுகளை வைத்திருந்தது. எனவே வெற்றிக்கு பெரிய மாற்றங்களை செய்யாமல் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது” என்று கூறினார்.



