ஆஷஸ் 2025/26 தொடர் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகின்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களைச் சொந்த மண்ணில் வலுவான அணி என்பதைக் காண்பித்துள்ளது.
முன்னதாக அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலைப் பெற்றும் 2வது இன்னிங்ஸில் சொதப்பி தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வெளிப்படுத்திய மோசமான பேட்டிங் முக்கிய காரணமானது. மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் டக் அவுட்டானார்.
கலங்கி அழுத்த ப்ராட்:
2வது இன்னிங்ஸில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரூட் மீண்டும் ஸ்டார்க் வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் போல்டானார். அதையும் சேர்த்து 2013 முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 29 டெஸ்ட் இன்னிங்ஸில் அவரால் சதமடிக்க முடியவில்லை. அதன் வாயிலாக ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடிக்காமலேயே அதிக இன்னிங்ஸில் விளையாடிய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையையும் ரூட் படைத்துள்ளார்.
அதை நேரலையில் வர்ணனையாளராக பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் கண்கலங்கி அழுதது சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் கண்கலங்கிய வீடியோ ஸ்கை ஸ்போர்ட்ஸ், செவன் கிரிக்கெட் சேனல்களின் சோசியல் மீடியாக்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேரலையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத காரணம் பற்றி பிராட் பேசியது பின்வருமாறு.
ஆஷஸ் என்றால் எமோஷன்:
“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அப்போது அப்படித்தான் ஒவ்வொரு இங்கிலாந்து ரசிகனும் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுடையக் கண்களை மூடி 10 நொடிகள் நீங்கள் பார்த்த அனைத்தும் உண்மையற்றதாக இருக்க வேண்டும் என்று நம்ப விரும்புவீர்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் போடப்பட்டு தற்போது அனிமேஷன் படமாக மாறியுள்ளது. இருப்பினும் அது முறையான ரியாக்சன் மற்றும் எமோஷன் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 74 ரன்ஸ்.. ஜிம்பாப்வேவிடம் வீரத்தை காட்டி விராட் கோலியின் உலக சாதனையை சமன் செய்த பாபர் அசாம்
“அதனாலேயே நாங்கள் ஆஷஸை இவ்வளவு விரும்புகிறோம். நீங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து ரசிகராக இருந்தாலும் ஆஷஸ் தொடர் உங்களுடைய உணர்வுகளை வெளியே கொண்டு வரும். ஒவ்வொரு தருணத்திலும் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. இதே போல ஆஷஸ் தொடர் தொடர்ச்சியாக வேகமாக நடைபெற்றால் நமக்கு இந்த கோடைகாலம் சிறப்பாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற தங்களுக்கு கிடைக்கும் தருணங்களைக் கொஞ்சம் நன்றாகப் பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.



