அனல் பறந்து வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் கோப்பையை தக்க வைத்தது. அதனால் ஜூலை 27இல் லண்டனில் துவங்கிய கடைசி போட்டியில் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து விளையாடி வரும் நிலையில் 3வது நாள் முடிவில் அந்நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2007 டி20 உலக கோப்பையில் வம்பிழுந்த ஆண்ட்ரூ ஃபிளின்டாப்புக்கு பாலிகாடாக இந்தியாவின் யுவ்ராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை கொடுத்து மோசமான உலக சாதனைகளை படைத்தார். அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் மனம் தளராமல் போராடி 2010 டி20 உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றிய அவர் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் 2016க்குப்பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்தார்.
யுவ்ராஜ் சிங்கின் உத்வேகம்:
ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவத்தால் முன்னேறி முதன்மை பவுலராக விளையாடி வரும் அவர் இதுவரை 165 போட்டிகளில் 602* விக்கெட்களை எடுத்து உலகிலேயே அதிக விக்கெட் எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் மொத்தமாக 845 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஆரம்பத்திலேயே அடி வாங்கினாலும் மனம் தராமல் போராடினால் வெற்றி காணலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜாம்பவானாக ஓய்வு பெறுவதால் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2007 டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் சிக்ஸர்களை கொடுத்திருக்கக் கூடாது என்று விரும்புவதாக ஸ்டுவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார். இருப்பினும் யுவ்ராஜ் சிங்கிடம் அன்றைய நாளில் வாங்கிய அடியே மனதளவில் தம்மை இரும்பாக மாற்றி இன்று இந்தளவுக்கு சாதிக்க உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் அது மிகவும் கடினமான நாளாகும். குறிப்பாக 21, 22 வயதில் இருப்பவருக்கு அது போல நடந்தால் எப்படி இருக்கும்? இருப்பினும் அதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவத்தால் மனதளவிலான அடிப்படைகளை கற்றுக் கொண்டேன்”
“அந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட வேண்டுமென நினைத்து பயிற்சிகளை அவசரப்படுத்தியதால் பந்துக்கு முந்தைய வழக்கமும் கவனமும் என்னிடம் இல்லாமல் போனது. அதனால் என்னுடைய சர்வதேச கேரியர் குறுகிய காலத்திலேயே முடிவடையும் என்பதை அறிந்தேன். ஆனாலும் அந்த அனுபவத்திற்கு பின் அதையே வைத்து என்னை நான் வாரியர் போல உருவாக்க தொடங்கினேன். இப்போதும் அன்றைய நாளில் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்”
“இருப்பினும் அந்த அனுபவம் உலகக் கோப்பையிலிருந்து நான் வெளியேறிவிட்டேன் என்பது போன்ற மோசமான உணர்வுகளை கொடுக்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இன்று மிகச்சிறந்த இரும்பை போன்ற மனம் கொண்ட போட்டியாளராக நான் மாறுவதற்கான எண்ணங்களை எண்ணுக்குள் தூண்டி என்னை முன்னோக்கி எடுத்துச் சென்றது. பொதுவாகவே நீங்கள் உங்களுடைய கேரியரில் மேடு பள்ளங்களை கடந்து வருவீர்கள். அதே போல (2016 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் 4 சிக்ஸர்கள் கொடுத்த) பென் ஸ்டோக்ஸ் தம்முடைய கேரியரில் வளர்ந்து வருவதை நீங்கள் பார்க்க முடியும்”
இதையும் படிங்க:வீடியோ : தம்முடைய கேரியரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு ஃபினிஷிங் செய்த ஸ்டுவர்ட் ப்ராட் – வாழ்த்திய யுவ்ராஜ் சிங்
“எனவே அது போன்ற மோசமான நாட்கள் தான் நீங்கள் மீண்டெழுவதற்கு உதவுகிறது. மேலும் கடந்த 15 – 16 வருட கிரிக்கெட்டில் நல்ல நாட்களை விட மோசமான நாட்களே அதிகமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த மோசமான நாட்களை நீங்கள் சமாளித்தால் தான் நல்ல நாட்கள் உங்களுக்காக மலரும்” என்று கூறினார். அப்படி மிகச் சிறந்த போட்டியாளராக உருவெடுத்துள்ள அவருக்கு யுவராஜ் சிங்கும் ட்விட்டரில் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.