
இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விகளுக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சர்மா சுமாராக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களை விமர்சிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோகித் தன்னைத்தானே நீக்கிக் கொண்டார். அதன் வாயிலாக இந்திய அணியிலிருந்து தன்னைத்தானே நீக்கிய முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தார்.
இருப்பினும் அடுத்து நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் ரோஹித் தலைமையில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் தலைமையில் வென்ற இந்தியா 10 மாதங்களுக்குள் 2 ஐசிசி கோப்பைகளை முத்தமிட்டது. அதன் காரணமாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் ரோஹித் கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2025 இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படத் தகுதியானவரா? என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ஸ்டீவ் வாக்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் தெரிவித்த பதில் பின்வருமாறு. “இது முற்றிலும் ரோஹித் சர்மாவை பொறுத்தது. இந்தப் பிரச்சனையை அவரால் மட்டுமே தீர்க்க முடியும்”
“அவர் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து இப்போதும் நான் கேப்டனாக செயல்பட வேண்டுமா? அல்லது இந்தியாவுக்காக விளையாட வேண்டுமா? அதற்காக நான் உறுதியாக இருக்கிறேனா? என்பது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும். கேப்டனாக செயல்பட என்னால் போதுமான நேரம் மற்றும் முயற்சிகளைப் போட முடியுமா? என்றும் அவர் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய பசங்க இதை செய்றத பாத்தா கவலையா இருக்கு.. பிளெமிங் கருத்தை சாடும் சிஎஸ்கே ரசிகர்கள்
“ஏனெனில் உங்களுடைய நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். அதில் நீங்கள் மனநிறைவு அல்லது ரிலாக்ஸாக இருக்க முடியாது” என்று கூறினார். இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் திணறலாக விளையாடிய ரோகித் சென்னைக்கு எதிரான 8வது போட்டியில் ஒரு வழியாக அரை சதத்தை அடித்தார். அதனால் இங்கிலாந்து தொடரில் ரோஹித் கேப்டனாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது.