ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர். அடுத்து 224 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களையும், ராகுல் திவாதியா 31 பந்துகளில் 53 ரன்களையும் குறித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மூன்று பந்துகளில் மிச்சம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து இன்று வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் கூறியதாவது : இந்த சேஸிங் அபாரமாக நிறைவடைந்தது. காட்ரெல் வீசிய ஒரே ஓவரில் ராகுல் திவாதியா ஆட்டத்தை மாற்றிவிட்டார். இந்த மைதானத்தின் சூழ்நிலைகளையும் தன்மையையும் நாங்கள் கடந்த போட்டியிலேயே பார்த்து இருந்ததால் எங்களுக்கு தெளிவான ஒரு ஐடியா இருந்தது.
மேலும் இது ஒரு சிறிய மைதானம் எனவே இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை வைத்திருந்தால் கடைசிவரை போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்பதை கணித்து இருந்தோம். சாம்சன் அருமையாக இந்த போட்டியிலும் சிக்சர்களை அடித்துக் கொண்டிருந்தார். ராகுல் திவாதியாவின் ஆட்டம் இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து சேர்த்தது. ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் டார்கெட் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தினர் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.