IND vs AUS : அற்புதமான கேட்ச், அபாரமான கேப்டன்ஷிப் – இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்த்த ஸ்டீவ் ஸ்மித் – 2 சாதனை

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. கடைசியாக கடந்த 2014/15 ஆம் ஆண்டு இத்தொடரை வென்ற ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்த ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டாமல் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களை வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது. அதே சமயம் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திணறிய ஆஸ்திரேலியாவுக்கு பட் கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதனால் 4 – 0 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்பது உறுதி என்று நிறைய கருத்துகளும் வெளிவந்தன.

- Advertisement -

மாஸ் ஸ்டீவ் ஸ்மித்:
அந்த நிலையில் இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்ற நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் வெறும் 109 ரன்களுக்கு சுருட்டும் அளவுக்கு தங்களது பவுலர்களை மாற்றி மாற்றி சரியாக பீல்டிங் செட்டப் செய்து சிறப்பான கேப்டன்ஷிப் செய்தார். அதற்கு ஈடு கொடுக்க முடியாத இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 186/4 என்ற நல்ல நிலையிலிருந்து 197 ரன்களுக்கு சுருண்டாலும் இந்தியாவை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் சுமாராக செயல்பட்டு 163 ரன்களுக்குச் சுருண்டது. இருப்பினும் நங்கூரமாக நின்று அனுபவத்தை காட்டிய புஜாரா 59 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஆனால் மொத்தமாக 8 விக்கெட்களை எடுத்த நேதன் லயனின் மாயாஜால சுழலில் லெக் சைட் திசையில் அடிக்க முயற்சித்து புஜாரா எட்ஜ் கொடுத்த பந்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் கண்ணிமைக்கும் நேரத்தில் கச்சிதமாக பிடித்து அற்புதமான கேட்ச் பிடித்தார். இறுதியில் 75 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவை டிராவிஸ் ஹெட் 49* ரன்களும் லபுஸ்ஷேன் 28* ரன்களும் எடுத்து 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

அதனால் முதலிரண்டு போட்டியில் கத்துக்குட்டியாக செயல்பட்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் உலகின் நம்பர் ஒன் அணியை போல் செயல்பட்டு இந்தியாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்து அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டதுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2017இல் புனேவில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தற்போது மீண்டும் வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -

1. அதன் வாயிலாக கடந்த 10 வருடங்களில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். கடைசியாக 2012இல் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இந்தியாவை 2 போட்டியில் தோற்கடித்து தொடரையும் வென்றிருந்தார்.

2. மேலும் 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 முறை தோற்கடித்த 4வது கேப்டன் என்ற சாதனையை ஆடம் கில்கிறிஸ்ட், கிரேம் ஸ்மித், அலெஸ்டர் குக் ஆகியோருக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். குறிப்பாக மகத்தான ரிக்கி பாண்டிங் இந்திய மண்ணில் 7 போட்டியில் 1 டெஸ்ட் வெற்றி கூட பதிவு செய்யாத நிலையில் ஸ்மித் 5 போட்டியில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : வெற்றி உறுதியான மிதப்பில் அஷ்வினை அலைக்கழித்த லபுஸ்ஷேன் – கடுப்பான அம்பயர், ரசிகர்கள் அதிருப்தி

இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா மீதான அவமானத்தையும் கிண்டல்களையும் துடைத்துள்ள ஸ்டீவ் ஸ்மித் 4 – 0 (4) என்ற கணக்கில் தோற்போம் என்று கணித்தவர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளார். அதனால பேசாமல் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் கேப்டனாக அவரே இருக்கலாம் என்று நிறைய இந்திய ரசிகர்களை பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement