
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது போட்டி டிசம்பர் 26ம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் ஆரம்பத்திலேயே பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டு 60 ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா 57 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடிய லபுஸ்ஷேன் அரை சதத்தை அடித்து 72 ரன்கள் விளாசி அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷை 4 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அப்படியே அலெக்ஸ் கேரி 31 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்.
அதனால் 299-6 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை இந்தியா விரைவில் சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறுபுறம் இந்தியாவை புரட்டி எடுத்து சிம்ம சொப்பனமாக மாறிய ஸ்டீவ் ஸ்மித் சதத்தை அடித்தார். தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய அவர் 140 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு பெரிய பின்னடைவைக் கொடுத்து ஒரு வழியாக அவுட்டானார்.
அவருடன் கேப்டன் பட் கமின்ஸ் 49, ஸ்டார்க் 13, நேதன் லயன் 13 ரன்கள் எடுத்தனர். அதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை பெற்றது. இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 1, ரவீந்திர ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 10* சதங்கள் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி தலா 9 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 19 வயசு குழந்தை பயத்தை காமிச்சுட்டான்.. கோலிக்கு இந்த தண்டனை கொடுங்க.. மான்டி பனேசர்
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மொத்தம் அவர் 11 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 10 சதங்கள் அடித்துள்ளதே முந்தைய சாதனை. மறுபுறம் மீண்டும் சுமாராகவே பந்து வீசிய இந்தியா இந்தப் போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.