Ashes 2023 : முதல் இன்னிங்ஸ் நாயகனாக சச்சின், பாண்டிங்கை மிஞ்சிய ஸ்டீவ் ஸ்மித் புதிய உலக சாதனை – திருப்பி அடிக்கும் இங்கிலாந்து

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து ஜூன் 28ஆம் தேதி லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 66 ரன்களும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 77 (73) ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 47 ரன்களும் எடுத்தனர். அவர்களை விட இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 15 பவுண்டரியுடன் 110 (184) ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் டாங் மற்றும் ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 91 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்த ஜாக் கிராவ்லி 48 (48) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஓலி போப் உடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட்துடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய பென் டூக்கெட் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப அடுத்து வந்த ஜோ ரூட் 10 ரன்களில் நடையை கட்டினார். அதைத்தொடர்ந்து வந்த ஹாரி குரூப் 45* ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17* ரன்களும் எடுத்த போது 2வது நாள் முடிவுக்கு வந்த நிலையில் 278/4 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் 138 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய 32 சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற ஜாம்பவான் ஸ்டீவ் வாக் சாதனை சமன் செய்தார்.

- Advertisement -

முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 12 சதங்கள் அடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற ஜேக் ஹோப்ஸ் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. டான் ப்ராட்மேன் (ஆஸ்திரேலியா) : 19 – இங்கிலாந்துக்கு எதிராக
2. சுனில் கவாஸ்கர் (இந்தியா) : 13 – வெஸ்ட் இண்டீஸ் எதிராக
3. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) : 12* – இங்கிலாந்துக்கு எதிராக
3. ஜேக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) : 12 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
4. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) : 12 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

இவை அனைத்தையும் விட இதுவரை மொத்தமாக அடித்துள்ள 32 சதங்களில் 21 சதங்களை போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் உலக சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஸ்டீவ் ஸ்மித் : 22*
2. ரிக்கி பாண்டிங் : 21
3. சச்சின் டெண்டுல்கர் : 20
4. ஜாக் காலிஸ் : 20

இதையும் படிங்க:2023 உலகக்கோப்பை : போட்டிகளின் நேரத்தினை மாத்துங்க. இதெல்லாம் சரியில்ல – தமிழக வீரர் வேண்டுகோள்

அத்துடன் இந்த போட்டியில் அடித்த 110 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 போட்டிகளிலேயே 9000* ரன்களை ஸ்டீவ் ஸ்மித் கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கேரியரின் 100 போட்டிகளுக்குள்ளேயே 9000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சச்சின், பாண்டிங் போன்ற வேறு எந்த மகத்தான ஜாம்பவான்களும் படைக்காத மற்றுமொரு உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

Advertisement