வீடியோ : ப்ராட்மேனை மிஞ்சி நவீன ஜாம்பவானாக ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை – ஓய்வின்றி தெ.ஆ’வை வெளுக்கும் ஆஸ்திரேலியா

Setev Smith Don Bradman
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தென்னாபிரிக்கா முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை நழுவ விட்டுள்ளது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு பின்தங்கிய அந்த அணி பைனல் செல்லும் வாய்ப்பையும் கிட்டதட்ட கோட்டை விட்டுள்ளது. அந்த அணியின் தோல்வியால் 4வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியாவின் பைனல் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜனவரி 4ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் தமக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக நின்று தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

- Advertisement -

நவீன ஜாம்பவான்:
அவருடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் அசத்திய உஸ்மான் கவஜா சதமடித்து ஆஸ்திரேலியாவை மேலும் வலுப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல அற்புதமாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய போது 11 பவுண்டர் 2 சிக்சருடன் சதமடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களில் அவுட்டானார். ஆனாலும் தென்னாப்பிரிக்க பவுலர்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியாத அளவுக்கு அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்தார்.

அதே வேகத்தில் 4வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியா அவர் தனது பங்கிற்கு 8 பவுண்டரி 1 சிக்சருடன் 70 (59) ரன்களை அதிரடியான வேகத்தில் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய உஸ்மான் கவஜா இரட்டை சத்தத்தை நெருங்கி 195* (368) ரன்கள் குவித்திருந்த போது மழை வந்ததால் 2வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. தற்போது நிலைமை 475/4 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை அடித்து நொறுக்கி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பும் மேலும் பிரகாசமாகி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நாயகன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 30ஆவது சதத்தை விளாசி அசத்தினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் காலத்தால் அழிக்க முடியாத காவிய தலைவனாக நிற்கும் ஜாம்பவான் டான் பிராட்மேனை மிஞ்சிய அவர் 3வது இடத்தை மேத்தியூ ஹெய்டனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. ரிக்கி பாண்டிங் : 41
2. ஸ்டீவ் வாக் : 32
3. ஸ்டீவ் ஸ்மித் : 30*
3. மேத்தியூ ஹெய்டன் : 30
4. சர் டான் ப்ராட்மேன் : 29

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 30 சதங்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற மேத்தியூ ஹெய்டன் சாதனையை தகர்த்த அவர் உலக அளவில் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 159 இன்னிங்ஸ்
2. ஸ்டீவ் ஸ்மித் : 162 இன்னிங்ஸ்*
3. மேத்யூ ஹைடன் : 167 இன்னிங்ஸ்
4. ரிக்கி பாண்டிங் : 170 இன்னிங்ஸ்
5. சுனில் கவாஸ்கர் : 174 இன்னிங்ஸ்

இதையும் படிங்கநாட்டுக்காக ஐபிஎல் அணிகள் நஷ்டத்தில் போனால் போகட்டும் – இந்திய வீரர்களை வெளுக்கும் கம்பீர், காரணம் என்ன

மேலும் தற்போது விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட 30 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ள அவர் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் என்ன தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement