வீடியோ : இவர் டெஸ்ட் பிளேயர் இல்ல, அடுத்தடுத்த சம்பவம் செய்த ஸ்டீவ் ஸ்மித் – பிக்பேஷ் வரலாற்றில் புதிய சாதனை

Steve SMith BBL 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரின் 2022/23 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 21ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. மழையால் தாமதமாக துவங்கி இருதரப்புக்கும் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ஜோஸ் பிலிப் 10 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பேட்டர்சன் 2 (4) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விடத் துவங்கிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அடுத்து வந்த மோய்சஸ் ஹென்றிக்ஸ் உடன் ஜோடி சேர்ந்து விரைவாக ரன்களை சேர்த்தார். 4வது ஓவரில் இணைந்த இவர்களில் ஒருபுறம் ஹென்றிக்ஸ் கம்பெனி கொடுக்கும் வகையில் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் மிரட்டலாக பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டார். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலான இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்தனர்.

- Advertisement -

அபார சாதனை:
அதில் விரைவாக ரன்களை சேர்த்த ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து தற்போது இருக்கும் நல்ல ஃபார்மை பயன்படுத்தி 10 ஓவர்களுக்கு மேல் இரு மடங்கு அதிரடியாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கினார். அதே வேகத்தில் அதிரடியாக செயல்பட்ட அவர் 17வது ஓவரிலேயே பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்டு சதமடித்து அசத்தினார். இருப்பினும் ஓயாமல் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் 125* (66) ரன்களை 189.39 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவருடன் ஹென்றிக்ஸ் 45* (36) ரன்கள் எடுத்ததால் 19 ஓவரில் சிக்ஸர்ஸ் அணி 187/2 ரன்கள் குவித்து அசத்தியது.

அதைத் தொடர்ந்து 188 ரன்களை துரத்திய தண்டர்ஸ் அணி சிக்ஸர்ஸ் அணியின் அதிரடியான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 14.4 ஓவரில் 62 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 16 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஓ’காபி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்டீவ் ஸ்மித் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அதிலும் இதே போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 100 ரன்கள் தாண்டாத அளவுக்கு தரமாக இருந்த பிட்ச்சில் சிக்ஸருடன் சதமடித்த அவர் கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இதே போல சிக்ஸருடன் சதமடித்து 101 (56) ரன்கள் விளாசி அசத்தினார். இதன் வாயிலாக 12 வருட பிக்பேஷ் தொடரின் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற அபாரமான சாதனையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த வீரரும் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்ததில்லை.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு அற்புதமாக செயல்பட்டு வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறார். அதனாலேயே மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக அறியப்படும் அவருக்கு சொந்த மண்ணில் 2022 நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முழுமையான வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: IND vs NZ : ஓடிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த சிறுவன். பாதுகாவலர்களிடம் ரோஹித் சொன்னது – என்ன தெரியுமா?

ஆனால் தற்போது அனுபவத்தை பயன்படுத்தி அதிரடியாக விளையாட துவங்கியுள்ள அவர் தம்மால் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். அவர்களின் ஆட்டத்தை பார்க்கும் ரசிகர்கள் “நீங்க டெஸ்ட் பிளேயர் இல்லை” என்று சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.

Advertisement