
ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் வென்றது. புகழ்பெற்ற காபா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இருப்பினும் பேட்டிங்கில் சுமாராகவே விளையாடிய அந்த அணி 334, 241 ரன்களை மட்டுமே எடுத்தது.
மறுபுறம் முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா 177 ரன்களை முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸில் 65 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக 22 (22) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 3 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார்.
அப்போது எப்படியும் இங்கிலாந்து வெல்லப்போவதில்லை என்று நினைத்த ஜோப்ரா ஆர்ச்சர் 2019 போல ஸ்மித் மண்டையை பதம் பார்க்கலாம் என்று நினைத்தார். 2019 ஆஷஸ் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமான ஆர்ச்சர் 150 கி.மீ பந்துகளை போட்டு ஸ்மித் தலையில் காயமடைய வைத்ததை மறக்க முடியாது. அதே போல இப்போட்டியிலும் அவருக்கு எதிராக ஆர்ச்சர் 150 கி.மீ பந்துகளை போட்டு தலையைத் தாக்க முயற்சித்தார்.
ஆனால் இம்முறை அனுபவத்தைப் பயன்படுத்திய ஸ்மித் அவர் வீசிய பவுன்சர் பந்துகளை 4, 0, 4, 6 என லெக் ஃசைட் திசையில் பவுண்டரிகளும் சிக்ஸருமாக பறக்க விட்டார். அத்துடன் “ஒன்றுமே நடக்காத போது தான் நீங்கள் வேகமாக பந்து வீசுவீர்கள், சாம்பியன்” என்று ஆர்ச்சரிடம் சொன்ன ஸ்மித் வாயாலும் பதிலடி கொடுத்தார். அதோடு நிற்காத அவர் அட்கின்சன் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸருடன் போட்டியை ஃபினிஷிங் செய்தார்.
இதன் வாயிலாக 1933க்கு பின் ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியை சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்த வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் கடந்த 1933ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வாலி ஹமோண்ட் சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: இதை மட்டும் கத்துக்கிட்டா இன்னும் சூப்பரா பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் – அஷ்வின் பதிவு
அதே போல இப்போட்டியில் ஸ்மித் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 23* (9) ரன்களை விளாசி 255.55 ஸ்ட்ரைக் ரேட்டில் போட்டியை ஃபினிஷிங் செய்தார். அந்த வகையில் வம்பிழுத்த ஆர்ச்சருக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் கேப்டனாக நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தியுள்ளார். அதனால் பட் கமின்ஸ், ஹேசல்வுட் இல்லாமலேயே ஆஸ்திரேலியா 2 வெற்றிகளை பெற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.