இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாட உள்ளது. வரும் நவம்பர் மாதம் துவங்கும் அந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அத்தொடரில் இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 2 தொடர்களிலும் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் லட்சியத்துடன் இந்தியா விளையாட உள்ளது.
ஓப்பனிங் – 4வது இடம்:
முன்னதாக டேவிட் வார்னர் ஓய்வு பெற்று விட்டதால் சமீபத்திய தொடர்களில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். ஆனால் ஓப்பனிங் இடத்தில் தடுமாற்றமாக விளையாடும் அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் அவர் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்ற பேச்சுக்கள் அந்நாட்டு வட்டாரத்தில் காணப்படுகின்றன. இந்நிலையில் அத்தொடரில் எங்கே களமிறங்கி இந்தியாவை அடிக்க வேண்டும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
மேலும் 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இம்முறை அதை மாற்றி ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஸ்மித் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. இருப்பினும் பின்னணியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது”
இன்னும் முடிவு பண்ணல:
“நான் 4வது இடத்தில் விளையாடுவதை விரும்புவதாக உஸ்மான் கவாஜா கூறியிருந்தார். மார்னஸ் லபுஸ்ஷேனும் அதே கருத்தை தெரிவித்திருந்தார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அணிக்காக நான் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் டாப் 2 அணிகள்”
இதையும் படிங்க: நிதிஷ் ரெட்டி இந்தியாவுக்கு விளையாடக் கூடாது ஆண்டவான்னு ஹைதராபாத் வேண்டிப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா
“கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நாங்கள் விளையாடி அவர்களை வீழ்த்தினோம். கடந்த 2 முறை இந்தியா இங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாடி வென்றனர். ஆனால் இம்முறை நாங்கள் மேஜையை திருப்புவோம் என்று நம்புகிறோம். பார்டர் – கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்கள் கடந்து விட்டது. இந்த வருடம் அதை நாங்கள் வென்றாக வேண்டும்” என்று கூறினார்.



