இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். மேலும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
அப்படி இருந்தும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடத் தவறியதால் இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டு 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்தியாவின் ரொனால்டோ:
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹர்மிசன் தெரிவித்துள்ளார். எனவே பும்ரா கடைசி நேரத்தில் குணமடைந்தால் கூட ஃபைனலில் இந்தியா அவரை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. என்னைப் பொறுத்த வரை பும்ராவுக்கு எந்த நேரத்திலும் உங்களால் மாற்று வீரரை கண்டறிய முடியாது”
“அதனால் தொடர் முழுவதும் விளையாடாவிட்டாலும் ஃபைனல் நடைபெறும் நாளின் காலையில் அவரை நான் அணியில் எடுப்பேன். ஏனெனில் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் உலகில் மிகவும் சிறந்தவர். இது தான் இந்திய அணியின் பார்வையிலிருந்து என்னுடைய கருத்து. அது உங்களுடைய சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வது போன்ற விஷயமாக இருக்கும்”
முக்கியமான பும்ரா:
“15 வருடங்களுக்கு முன்பாக ரெனால்டோவை நீங்கள் அணியில் இருந்து மாற்ற முடியாது. அதைத் தான் பும்ராவிடம் இந்தியா செய்யும் என்று நான் நினைக்கிறேன். அவர் இல்லாமல் 14 பேர் கொண்ட அணியாகும். குரூப் சுற்றுப்போட்டிகளை விளையாடுவதற்கு அவர்களை எனக்குப் போதும். அவரை நாம் செமி ஃபைனலில் விளையாட வைக்க முடியும்”
இதையும் படிங்க: டிராவிட் மாதிரி இல்ல.. தேவையில்லாத இந்த விஷப்பரீட்சை உங்கள வீழ்த்தலாம்.. கம்பீரை எச்சரித்த ஜஹீர் கான்
“மற்ற வீரராக இருந்தால் மாற்று வீரர்கள் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர் பும்ரா என்பதால் மாற்று வீரர் இல்லை” என்று கூறினார். அந்த வகையில் லீக் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் சாம்பியன்ஸ் டிராபியின் நாக் அவுட் போட்டிகளில் பும்ரா விளையாடினாலே இந்தியா கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



