இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அதில் ஜூலை 28ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தம்புலா நகரில் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட நடப்பு சாம்பியன் இந்திய அணி இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய ஷபாலி வர்மா 16 (19) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார்.
இலங்கை சாம்பியன்:
ஆனால் எதிர்ப்புறம் வந்த உமா சேதிரி 9, கேப்டன் ஹெர்மன்பிரீத் 11 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதே போல அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெமிமா ரோட்டரிகஸ் 29 (6) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய மந்தனா அரை சதமடித்து 10 பவுண்டரியுடன் 60 (47) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ரிச்சா கோஸ் அதிரடியாக 30 (14) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் இந்தியா 165/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக கவிசா திலாரி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 166 ரன்களை துரத்திய இலங்கைக்கு விஸ்மி குணரத்னே 1 ரன்னில் ரன் அவுட்டானார். ஆனால் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் சமாரி அத்தபட்டு நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார்.
அவருடன் அடுத்ததாக வந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை எளிதாக பிரிக்க முடியாமல் திண்டாடிய இந்தியா சில கேட்ச்களையும் கோட்டை விட்டது. அதை பயன்படுத்தி விளையாடிய இந்த ஜோடியில் அத்தப்பட்டு அரை சதமடித்து 61 (43) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து தீப்தி சுழலில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சமரவிக்ரமா அரை சதமடித்து 69* (51) ரன்கள் குவித்தார். அவருடன் அடுத்ததாக வந்த கவிசா திலாரி 30* (16) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 167/2 ரன்கள் எடுத்த இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக நடப்பு சாம்பியன் இந்தியாவை தோற்கடித்த இலங்கை மகளிர் 2024 கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இதையும் படிங்க: இப்போதைக்கு சூர்யகுமாரை போட்ருக்காங்க.. உண்மையில் அவர் தான் இந்தியாவின் அடுத்த கேப்டன்.. ஸ்டைரிஸ் பேட்டி
சொல்லப்போனால் 8 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக இலங்கை வரலாற்றை மாற்றி எழுதி மகளிர் ஆசிய கோப்பையை வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. மறுபுறம் தோல்வியை சந்தித்தாலும் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா இப்போதும் வெற்றிகரமான அணியாக ரன்னர்-அப் மெடலை மட்டும் பெற்று வெளியேறியது.



