156க்கு ஆல் அவுட்.. 26 வருடத்துக்கு பின் தெறிக்க விட்ட இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு.. இங்கிலாந்து மோசமான சாதனை

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஓலி போப் 154, பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மிலன் ரத்நாயகே 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக சுமாராக பேட்டிங் செய்து 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பதும் நிசாங்கா 64, கேப்டன் டீ சில்வா 69, கமிண்டு மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய இலங்கை:

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹுல் 3, ஓலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 62 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் சிறப்பாக விளையாடி 300 – 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமாக பந்து வீசிய இலங்கை பென் டக்கெட் 7, கேப்டன் ஓலி போப் 7, ஜோ ரூட் 12, ஹரி ப்ரூக் 3 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தனர்.

அதனால் 82-7 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் போராடி 67, டான் லாரன்ஸ் 35 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை வெறும் 156 ரன்களுக்கு இலங்கை சுருட்டி வீசியது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

26 வருடங்கள் கழித்து:

இதற்கு முன் இதே ஓவல் மைதானத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இலங்கைக்கு அதிகபட்சமாக லகிரு குமாரா 4, விஸ்வா பெர்னாண்டோ 3, அஷிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்.. வங்கதேச தொடருக்காக ரோஹித் தலைமையில் வெய்ட்டான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ

மேலும் இத்தொடரில் மொத்தமாக 17 விக்கெட்டுகள் எடுத்துள்ள அசிதா பெர்னாண்டோ இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து 219 என்ற இலக்கை இலங்கை துரத்தி வருகிறது. இந்த இலக்கு மிகவும் குறைவாக இருப்பதால் இலங்கை வெற்றி பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement