இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் போராடி 248/7 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பதும் நிசாங்கா 45, அவிஸ்கா பெர்னாண்டோ 96, குசால் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 249 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு மீண்டும் திண்டாட்டமாக விளையாடிய துணை கேப்டன் சுப்மன் கில் 6 (14) ரன்களில் அவுட்டானார்.
பறந்த மானம்:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 35 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த ரிசப் பண்ட் காட்டுத்தனமாக இறங்கி சென்று அடிக்க முயற்சித்து 6 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை கடுப்பேற்றினார். அதனால் 63/3 என தடுமாறிய இந்திய அணிக்கு நங்கூரத்தை போட முயற்சித்த விராட் கோலி 20, அக்சர் பட்டேல் 2, ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் துணித் வெல்லாலகே சுழலில் அவுட்டானார்கள்.
போதாகுறைக்கு அறிமுக வீரர் ரியான் பராக் 15, சிவம் துபே 9 ரன்களில் வண்டர்சே சுழலில் அவுட்டானார்கள். இறுதியில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்து போராடியும் 26.1 ஓவரிலேயே இந்தியாவை 138 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துணித் வெல்லலாகே 5, ஜெஃப்ரி வாண்டர்சே 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் வலுவான இந்தியாவை தோற்கடித்த இலங்கை 2023 ஆசிய கோப்பை ஃபைனல் தோல்விக்கு பழி தீர்த்து இத்தொடரை வென்றது. அதை விட 1997க்குப்பின் முதல் முறையாக இந்தியாவை ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் தோற்கடித்து இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டு சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997ஆம் ஆண்டு இதே போல அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை சச்சின் தலைமையிலான இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது.
இதையும் படிங்க: 3 விக்கெட் எடுத்திருந்தாலும் நான் அந்த தப்பை பண்ணிட்டேன்.. அதை கன்ட்ரோல் பண்ணியிருக்கலாம் – ரியான் பராக்
மறுபுறம் கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே 27 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. இது போக 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியில் சந்தித்து இந்தியா மற்றொரு அவமானத்தை சந்தித்துள்ளது.



