கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தற்போது என்ற (0-1) கணக்கில் பின்தங்கியுள்ளது.
இதன் காரணமாக இன்றைய மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற கட்டாயத்துடன் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணி சார்பாக அவிஷ்கா பெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ரியான் பராக் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அவரது அறிமுக போட்டியிலேயே இப்படி சிறப்பான பந்துவீச்சு செயல்பாடு அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் பாதி முடிந்த பின்னர் தனது பந்துவீச்சு குறித்து பேசியிருந்த ரியான் பராக் கூறுகையில் : உண்மையிலேயே நான் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் எனக்கு சிறிய ஏமாற்றம் இருக்கிறது.
ஏனெனில் நான் இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை பந்துவீச்சில் குறைவாக கொடுத்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் முதல் 25 ஓவர்கள் பந்து திரும்பவே இல்லை. ஆனால் அதன்பிறகு பந்து திரும்ப ஆரம்பித்தது. ஒருவேளை அடுத்த 25 ஓவரும் பந்து திரும்பாமல் இருந்திருந்தால் 300 ரன்கள் கூட அவர்கள் அடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க : 2023 உ.கோ கிடையாது.. இந்தியாவின் பயிற்சியாளராக என்னோட கேரியரில் அதான் லோயஸ்ட் பாய்ண்ட்.. டிராவிட் ஆதங்கம்
இருப்பினும் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்த இலக்கை எங்களால் எட்ட முடியும். நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதற்காக நான் தயாராக இருக்கிறேன் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



