ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து நடப்புச் சாம்பியன் இந்தியா வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொள்வார் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளை அதிரடியாக எதிர்கொண்டு சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே அவருக்கு எதிராக பாகிஸ்தான் பவுலர்கள் ஆரம்பத்திலேயே நெஞ்சுக்கு நேராக பந்து வீசுவார்கள் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அதை சமாளித்து விட்டால் அபிஷேக் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்றும் அவர் கணித்துள்ளார்.
அபிஷேக் பாத்துக்குவாரு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராகவும் அசத்திய அபிஷேக் சர்மா இம்முறை எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் மேலே நாம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை உருவாக்கக்கூடாது. பெரும்பாலான அதிரடி பேட்ஸ்மேன்களைப் போல அவரும் தன்னுடைய உடலுக்கு நெருக்கமாக வரும் பந்துகளை சில நேரங்களில் தவறாக அடித்து கேட்ச் கொடுக்கிறார்”
“ஐபிஎல் தொடரில் கூட அவர் 2 – 3 முறை அந்த பந்துகளில் ஸ்கொயர் பகுதியில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். எனவே அவருடைய நெஞ்சு மற்றும் உடல் பகுதியை நோக்கி பாகிஸ்தான் பவுலர்கள் பந்து வீச முயற்சிக்க வேண்டும். ஆனால் அந்த ஆரம்பக்கட்ட சவாலை சமாளித்து விட்டால் அபிஷேக் சர்மா பாகிஸ்தான் பந்து வீச்சை பந்தாடுவார்” என்று கூறினார்.
20 ஓவருக்கு 8 பேட்ஸ்மேன்களா:
அதே போல 20 ஓவர்களை எதிர்கொள்ள 8 பேட்ஸ்மேன்கள் தேவையில்லை என்பதால் 99 சர்வதேச டி20 விக்கெட்டுகள் எடுத்துள்ள அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் விளையாட வேண்டும் என்று நான் முதல் போட்டியிலேயே தெரிவித்து விட்டேன்”
இதையும் படிங்க: ஓப்பனிங் ஆடல தான்.. ஆனா அவரால் முடியாததுன்னு ஒன்னுமில்ல.. சஞ்சு சாம்சனுக்கு – அசிஸ்டன்ட் கோச் ஆதரவு
“உண்மையாகவே 20 ஓவர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவையா? குறிப்பாக பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக உங்களுக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவையா? உண்மையில் நம்முடைய டாப் 4 பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்பதே தெரியவில்லை. இந்திய அணியில் அனைத்தும் ஸ்பின்னர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. பாகிஸ்தானும் ஹரிஷ் ரஃவூபை கழற்றி விட்டு ஸ்பின்னர்களை அதிகம் தேர்ந்தெடுத்துள்ளது” என்று கூறினார்.



