இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக பல விடயங்கள் பார்க்கப்படுகின்றன. அதேபோன்று தோனியின் மீதும் தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் ஒரு கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனி சரியாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணி இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தோனியின் கேப்டன்சி, பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் என எந்த ஒரு முடிவும் சரி இல்லை தனிப்பட்ட வகையில் தோனியின் பேட்டிங்கும் சரியில்லை. பேட்டிங்கில் எப்போது களமிறங்கினாலும் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனி ஆமை வேக ஆட்டம் ஆடி வருகிறார். தோனி பவுண்டரிகளை அடிக்க பெரிதளவு சிரமப்பட்டு வருகிறார்.
தோனி விளையாடுவது போன்று மற்ற வீரர்கள் விளையாடி இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது விமர்சனம் எழுந்திருக்கும். குறிப்பாக இத்தொடரில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, முரளி விஜய் போன்ற பெரிய வீரர்கள் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பும் போது வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் தோனி எவ்வளவு சொதப்பினாலும் அவருக்கு ஆதரவாக வர்ணனையாளர்கள் பேசிவருகிறார்கள்.
எந்த ஒரு சமயத்திலும் தோனி செய்யும் தவறை அவர்கள் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்ததில்லை. மேலும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினால் கூட தோனிக்கு வர்ணனையாளர்கள் ஆதரவளித்தே பேசி வருகின்றனர். இதனை ரசிகர்கள் நேரடியாக விமர்சித்து வந்தாலும் வர்ணனையாளர்கள் டோனியை பற்றி பேசவே பயப்படுகிறார்கள். இந்நிலையில் தோனி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் தோனியை குறிப்பிட்டு நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியின் அணி தேர்வு சரியாக இல்லை. இளம் வீரர்களை அவர் விளையாட வைப்பது இல்லை. மேலும் தோல்விக்காக தோனி சொல்லும் காரணங்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஜெகதீஷனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஸ்பார்க் இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. ஜாதவ் என்ன ஸ்பார்க் உடன் விளையாடி விட்டார் என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி தோனி செய்யும் தவறை மற்றும் மட்டும் வர்ணனையாளர்கள் பேசுவது கிடையாது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் ? தோனி தவறு செய்தாலும் அவர் செய்தது தவறு தான் அவரை குறிப்பிட்டு வர்ணனை செய்ய வேண்டும். போட்டியின் தன்மை எவ்வாறு செல்கிறதோ அதற்கேற்றார்போல் விமர்சனங்களை கொடுக்க வேண்டும் என்று விளாசியுள்ளார் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.