இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும் அந்தத் தொடரில் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் சுமாராக விளையாடியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று புகழப்படும் கேப்டன் சூரியகுமார் யாதவ் பொறுப்பின்றி டாப் எட்ஜ் கொடுத்து தம்முடைய விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் சாம்சன் ஈகோவுடன் விளையாடி தன்னுடைய விக்கெட்டை பரிசளித்ததாக முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். எனவே அதை மாற்றிக் கொள்ளவில்லையெனில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈகோவுடன் சாம்சன்:
அதே போல சூரியகுமாரும் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சாம்சன் பேருந்தை தவற விட்டது போலிருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் ஒரே மாதிரியாக அடித்து அவுட்டானார். அவர் தனது ஈகோவை காட்ட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்”
“குறிப்பாக என்னால் இந்த ஷாட்டை அடிக்க முடியும் என்று அவர் காண்பிக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் ஈகோவுடன் செல்கிறாரா அல்லது உண்மையில் தடுமாறுகிறாரா என்பது தெரியவில்லை. அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு நான் சோகத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினேன்”
சூர்யாவும் ஏமாற்றம்:
“ஆனால் சாம்சன் இப்படியே தொடர்ந்து விளையாடினால் மன்னிக்கவும் நன்றி சொல்லி விட்டு ஜெய்ஸ்வாலை மீண்டும் கொண்டு வாருங்கள். இப்படியே சென்றால் அடுத்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் தாமாக துவக்க வீரராக விளையாடுவார் என்பதே என்னுடைய கருத்து. அதே போல சூரியகுமார் யாதவின் கடைசி 10 போட்டிகளின் விவரத்தை எனக்குக் காட்டுங்கள். அவரும் இந்தத் தொடரில் ஒரே மாதிரியான ஷாட்டை அடித்து அவுட்டானார்”
இதையும் படிங்க: 2012லயே சொன்னேன்.. யாரும் இவ்வளவு செய்யல.. நிரூபிக்க தேவையில்லாத ரோஹித், கோலிக்கு பீட்டர்சன் ஆதரவு
“பிளிக் அடிக்க முயற்சித்த அவர் டாப் எட்ஜ் கொடுத்து அவுட்டானார். அந்த வகையில் சாம்சன், சூரியகுமார் ஆகிய இருவருமே தங்களது ஆட்டத்தில் வேலை செய்ய வேண்டும். சூர்யாவுக்கு ஃபிளிக் செய்வது பலம். ஆனால் எக்ஸ்ட்ரா வேகம் காரணமாக அவரால் அசத்த முடியவில்லை. அவர் ரிலாக்ஸாக விளையாடாமல் வேகமாக அடிக்க முயற்சிப்பதே அதற்கு காரணம். எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவரான அவர் இந்தத் தவறைத் திருத்திக் கொண்டு மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



