இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் விமர்சனங்களை சந்தித்து அவர்கள் பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தனர்.
அடுத்ததாக விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர். அதிலாவது அவர்கள் ஃபார்மை மீட்டெடுத்து அசத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்து நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு அவர்களுடைய நல்ல பேட்டிங் தேவைப்படுகிறது.
பீட்டர்சன் ஆதரவு:
இந்நிலையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களுடைய திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான்கள். 36, 37 வயதாகும் அவர்கள் அற்புதமான பொழுதுபோக்காளர்கள்”
“அவர்களிடம் இன்னும் சில வருடங்கள் இருக்கிறது. விராட் கோலி இந்தியா கண்ட மகத்தான சேசர். இந்த உலகில் வேறு எந்த ஒற்றை பேட்ஸ்மேனும் விராட் கோலியை விட தன்னுடைய நாட்டுக்காக அதிகப் போட்டிகளை சேசிங் செய்து வென்று கொடுத்ததில்லை. எனவே அவர் திரும்பும் போது நன்றாக விளையாடுவார். அவர்கள் இருவரையுமே நான் விரும்புகிறேன்”
தரமான ரோஹித்:
“2012 எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணிக்குள் வந்த போது கொஞ்சம் விமர்சனங்கள் இருந்தது. இருப்பினும் இந்தக் குழந்தை மிகவும் ஸ்பெஷலாக விளையாடப் போகிறது என்று அப்போது நான் சொன்னேன். அதே போலவே தன்னுடைய கேரியர் முழுவதும் அவர் அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு அவர் தான் முதல் வீரராக சென்ற பயிற்சிகளை எடுத்தார்”
இதையும் படிங்க: அந்த 2 பேரை சிஎஸ்கேவில் பாத்துருக்கேன்.. 2011 உ.கோ ஃபைனலில் யுவிக்கு முன் களமிறங்கியது பற்றி தோனி பேட்டி
“அவர் 140 கி.மீ வேகத்தில் என்னுடைய மூக்குக்கு நேராக நீங்கள் பவுன்சரை வீசினால் நான் சிக்ஸராக அடிப்பேன் என்ற அணுகு முறையை கொண்டுள்ளார். அந்த வகையில் நல்ல துவக்கத்தைப் பெற்ற ரோகித் சர்மா அப்போது முதல் சிறந்த பேட்ஸ்மேனாகவே செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா – இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



