இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சர்வதேச அணிகளுக்கு முன்னுதாரணமாக உடற்தகுதியில் மிகச் சிறப்பான அணியாக திகழ்ந்து வருகிறது. தற்போதெல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டுமெனில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமின்றி உடற்தகுதியிலும் பிட்டாக இருந்தால் மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்கிற ஒரு நிலை இருந்து வருகிறது. அந்த அளவிற்கு உடல் தகுதிக்கு இந்திய அணி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்திய அணியை பார்த்து பல்வேறு அணிகளும் தங்களது வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்கிற விதிமுறையை விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது கொண்டு வந்தார்.
ஆனால் விராட் கோலிக்கு முன்னதாகவே தோனி உடற்குதி விடயத்தில் கவனமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டதாவது :
இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் ஒரு போட்டியின் போது வெற்றி பெறும் தருவாயில் இருந்த இந்திய அணி பீல்டிங்கில் செய்த சொதப்பல் காரணமாக அந்த போட்டியில் தோற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் போட்டி முடிந்த பின்னர் கடும் கோபத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் தோனி உடைமாற்றம் அறைக்கு சென்று வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தோனி பேசுகையில் : நமது வீரர்கள் முழு திறமையையும் இந்த போட்டியில் வெளிப்படுத்தி விளையாடவில்லை என்பதுதான் உண்மை. பல்வேறு விடயங்களில் நாம் தவறு செய்து வருகிறோம். உடற்பகுதி என்பது வீரர்களுக்கு மிகவும் முக்கியம்.
இதையும் படிங்க : அன்று திட்டிய அதே இந்தியரை கொண்டாடிய இங்கிலாந்து.. ஹண்ட்ரட் ஃபைனலில் சிக்ஸருடன் ஜெய்க்க வைத்த தீப்தி
அடுத்த ஆண்டு 2015 உலக கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என்றால் எவ்வளவு சாதித்தாலும் உடற்தகுதி இல்லை என்றால் நிச்சயம் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். உலககோப்பை தொடரில் உங்களுக்கு இடம் கிடைக்காது என வீரர்களிடம் தோனி கடுமையாக பேசியிருந்ததாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.



