NZ vs SL : கடைசி பந்தில் நியூசிலாந்து சிக்ஸர், டையில் முடிந்த போட்டி – பரபரப்பான சூப்பர் ஓவரில் இலங்கை உலக சாதனை வெற்றி

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இலங்கை அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் 2 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. அந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 2ஆம் தேதியன்று துவங்கியது.

ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு முதல் பந்திலேயே நிசாங்கா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 25 (9) ரன்களும் அடுத்து வந்த டீ சில்வா 15 (10) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அந்த நிலையில் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய குசால் பெரேரா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 53* (45) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

சூப்பர் ஓவர் போட்டி:
அவரை விட அதிரடி காட்டிய அசலங்கா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 67 (41) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க கடைசியில் வணிந்து ஹசரங்கா 2 பவுண்டரியுடன் 21* (11) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இலங்கை 196/5 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீசம் 2 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 197 ரன்களை துரத்திய நியூஸிலாந்துக்கு பௌஸ் 2, டிம் ஷைபர்ட் 0 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றார்கள்.

அதனால் 3/2 என தடுமாறிய அந்த அணியை 3வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த கேப்டன் டாம் லாடம் 27 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் சேப்மேன் 3வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தலா 2 பவுண்டரி சிக்சருடன் 33 (23) ரன்களில் அவுட்டானார். அவர்களுடன் இணைந்து அசத்திய டார்ல் மிட்சேல் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 66 (44) ரன்களில் அவுட்டாகி செல்ல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் நீசம் 19 (10) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் ஆடம் மில்னேவை 3 (4) ரன்களில் அவுட்டாக்கிய இலங்கை வெற்றிக்கு போராடியது. அதனால் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் தசுன் சனாகா வீசிய கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு போராடிய ரச்சின் ரவீந்தரா 26 (13) ரன்களில் முதல் பந்திலேயே அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த இஷ் சோதி 2, 2, 1 பைஸ் ரன்கள் எடுக்க 5வது பந்தில் ஹென்றி ஷிப்லே சிங்கிள் எடுத்தார். அதனால் கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது மிட் விக்கெட் திசையில் இஷ் சோதி அதிரடியான சிக்சரை பறக்க விட்டார்.

அதன் காரணமாக 20 ஓவர்களில் நியூசிலாந்தும் 196/8 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக சனாக்கா, ஹசரங்கா மற்றும் மதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் துல்லியமாக பந்து வீசிய இலங்கையின் ஸ்பின்னர் மகேஷ் தீக்சனா 8 ரன்கள் மட்டும் கொடுத்து ஜிம்மி நீசம் 0 (1) மார்க் சாப்மேன் 6 (4) என 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சொற்ப ரன்களில் சாய்த்தார்.

- Advertisement -

இறுதியில் 9 ரன்களை துரத்திய இலங்கைக்கு ஆடம் மில்னே வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தில் மெண்டிச் சிங்கிள் எடுக்க 2வது பந்தில் சிக்சரும் அடுத்த நோ-பால் பந்தில் பவுண்டரியும் பறக்க விட்ட அசலங்கா 10* (2) ரன்கள் விளாசி அதிரடியான வெற்றி பெற வைத்தார். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்துள்ளது.

இதையும் படிங்க: 2023 உலக கோப்பை சான்ஸ் பறி போனதில் தப்பே இல்ல, மொஹாலி மைதானத்தை விளாசும் இந்திய ரசிகர்கள் – நடந்தது என்ன

குறிப்பாக 2 பந்துகளில் 12 ரன்கள் விளாசிய இலங்கை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் குறைந்த பந்துகளில் வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையும் படைத்துள்ளது. இதற்கு முன் 2020இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வேவும் 2022இல் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் சூப்பர் ஓவரில் 3 பந்துகளில் சேசிங் செய்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement