SL vs IRE : அயர்லாந்தை அசால்ட்டாக சாய்த்த இலங்கை வரலாற்று வெற்றி – 71 வருட சாதனையை உடைத்த வீரர், புதிய உலக சாதனை

SL vs IRE
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஏப்ரல் 24ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க கால்லே மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 492 ரன்கள் குவித்து தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2018இல் பாகிஸ்தானுக்கு எதிராக டப்லின் நகரில் 339 ரன்கள் குவித்ததே அந்த அணியின் முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் பால் ஸ்டெர்லிங் சதமடித்து 103 ரன்களும் குர்ட்டிஸ் கேம்பர் சதமடித்து 111 ரன்களும் எடுத்த நிலையில் கேப்டன் ஆண்டி பால்பரின் 95, லார்கன் டூக்கர் 80 என இதர வீரர்களும் பெரிய ரன்களை எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நீங்களே இப்படி அடித்தால் எங்கள் சொந்த ஊரில் நாங்கள் எப்படி அடிப்போம் என்பது போல அயர்லாந்து பவுலர்கள் போதும் போதுமென்று சொல்லும் அளவுக்கு அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 704/3 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
குறிப்பாக மதுஷ்கா 205, கேப்டன் கருணரத்னே 115, குசால் மெண்டிஸ் 245, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 100* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை விளாசினார். சொல்லப்போனால் இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 4 பேட்ஸ்மேன்களும் சதமடித்த அணி என்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உலக சாதனையையும் இலங்கை சமன் செய்தது. அதைத்தொடர்ந்து 212 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய அயர்லாந்து 4 மற்றும் 5வது நாட்களில் வழக்கம் போல சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஹரி டெக்டர் 85 ரன்களும் கேப்டன் ஆண்டி பால்பிரின் 46 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இலங்கை சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளும் அஷிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அடுத்தடுத்த இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 2 – 0 (2) என்ற கணக்கில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது வெற்றியை பதிவு செய்து இலங்கை மற்றுமொரு வரலாறு படைத்துள்ளது. இந்த 100 வெற்றிகளில் 84 வெற்றிகள் ஆசிய கண்டத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். அதிலும் குறிப்பாக 68 வெற்றிகளை சொந்த மண்ணில் இலங்கை பதிவு செய்துள்ளது. ஜிம்பாப்வே (6) இங்கிலாந்து (3) தென்னாபிரிக்கா (3) நியூசிலாந்து (2) வெஸ்ட் இண்டீஸ் (2) என வெளிநாடுகளில் எஞ்சிய வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதை விட இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த பிரபத் ஜெயசூர்யா 2வது இன்னிங்ஸில் எடுத்த 2 விக்கெட்களையும் சேர்த்து மொத்தமாக 7 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயக்கன் விருதை வென்று அசத்தினார்.

இதையும் படிங்க:CSK vs RR : சென்னை அணியை அலறவிட்ட துருவ் ஜூரெல். யார் இவர்? – முழுவிவரம் இதோ

கடந்த 2022 ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான சுழல் பந்து வீச்சாளரான அவர் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 56 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த சுழல் பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் அஃல்ப் வேலண்டைன் 1951ஆம் ஆண்டு தன்னுடைய முதல் 8 போட்டிகளில் 50 விக்கெட்களை எடுத்து படைத்த உலக சாதனையை தற்போது அவர் 71 வருடங்கள் கழித்து உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement