ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர் – நம்ப முடியாத உலக சாதனையுடன் மாஸ் வெற்றி

SL vs Aus
Advertisement

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. ஐசிசி டி20 உலககோப்பை 2021 தொடரை வென்று சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கொழும்புவில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்டு இலங்கையை அதன் சொந்த மண்ணில் சாய்த்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து அத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜூன் 11 தேதியான நேற்று பல்லேக்கேலே நகரில் நடைபெற்றது.

STeve Smith SL vs AUs

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176/5 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 பவுண்டரியுடன் 39 (33) ரன்களும் கேப்டன் ஆரோன் பின்ச் 5 பவுண்டரியுடன் 29 (20) ரன்களும் எடுக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 16 (9) ரன்களில் நடையை கட்டினார். அந்த நிலைமையில் வந்த ஜோஷ் இங்லீஷ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் நட்சத்திர வீரர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ் 38 (23) ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37* (27) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மகீஷ் தீக்சனா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

திணறிய இலங்கை:
அதை தொடர்ந்து 177 என்ற இலக்கை துரத்திய இலங்கைக்கு தொடக்க வீரர் குணதிலகா 15 (12) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய அசலங்கா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் நிஷாங்கா 27 (25) பனுக்கா ராஜபக்சா 17 (13) குஷால் மெண்டிஸ் 6 (8) என முக்கிய வீரர்கள் ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 13.5 ஓவரில் 98/5 என திணறிய இலங்கைக்கு அடுத்ததாக வந்த ஹசரங்கா 8 (7) ரன்களில் அவுட்டானதால் தோல்வி உறுதி என்று அனைவரும் நினைத்தனர்.

SL vs AUs T20

இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய இலங்கை அணி கேப்டன் தசுன் சனாகா மனம் தளராமல் வெற்றிக்காக போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறியதால் கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 59 ரன்கள் அதாவது ஓவருக்கு 20 ரன்கள் தேவைபட்டதாலும் கேப்டன் ஷானகாவும் 6* (12) என திணறி கொண்டிருந்ததால் இலங்கையின் தோல்வி உறுதி என்று அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

மாஸ் வெற்றி:
ஆனால் உலகத்தரம் வாய்ந்த பவுலராக கருதப்படும் ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 18-வது ஓவரில் அந்நியனாக மாறிய அவர் 6, 6, 4, 4 என மிரட்டலான பவுண்டரிகளை பறக்கவிட்டு மொத்தம் 21 ரன்கள் சேர்த்து 18-வது ஓவரிலும் 10 ரன்களை விளாசி திடீரென்று போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆனாலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ரிச்சர்ட்சன் 2 ஒயிட் உட்பட முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இடையில் கருணரத்னே 14* (10) ரன்கள் எடுக்க கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 4, 6, 6 என சிக்சர்களை பறக்கவிட்ட ஷனாகாவின் ஆட்டத்தால் அரண்டு போன ரிச்சர்ட்சன் கடைசி பந்தில் ஒயிட் வீசியதால் 1 பந்து மீதம் வைத்த இலங்கை 19.5 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

அதனால் உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 3 ஓவர்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இலங்கை ஏற்கனவே சொந்த மண்ணில் இத்தொடரை இழந்தாலும் 2 – 1 என்ற கணக்கில் தொடரை நிறைவு செய்து ஒயிட் வாஷ் தோல்வியைத் தவிர்த்தது. மேலும் பொருளாதார நெருக்கடியால் சோகத்தில் தவிக்கும் இலங்கை மக்களின் முகத்தில் இந்த வெற்றி மிகப்பெரிய புன்னகையை ஏற்படுத்தியது.

உலகசாதனை:
இலங்கை மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. ஏனெனில் கடைசி 3 ஓவர்களில் 59 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த இலங்கை சர்வதேசம் மற்றும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 3 ஓவரில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய நம்பமுடியாத உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல் இதோ:
1. இலங்கை : 59 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. சிட்னி சிக்ஸர்ஸ் : 56 ரன்கள், சிட்னி தண்டர்ஸ்க்கு எதிராக, பிபிஎல், 2015

அதேபோல் மொத்தம் 54* (25) ரன்கள் எடுத்து இந்த சரித்திர வெற்றிக்கு பங்காற்றிய கேப்டன் சனாகா ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சேசிங் செய்யும் போது கடைசி 3 ஓவரில் 50 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. 50 – தசுன் சனாகா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2 46 – இசுறு உடானா, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2019
3. 45 – மைக் ஹசி, பாகிஸ்தானுக்கு எதிராக, 2010

Advertisement