SL vs NZ : அயர்லாந்துக்கு கருணை காட்டாமல் துவம்சம் செய்த இலங்கை – இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்து மிரட்டல்

SL vs IRE
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அயர்லாந்து முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஏப்ரல் 24ஆம் தேதி புகழ்பெற்ற கால்லே மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து மெக்கோலம் 10, மூர் 5, ஹரி 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 89/3 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை நங்கூரமாக நின்று மீட்டெடுத்த கேப்டன் ஆண்டி பால்பிரின் 14 பவுண்டரியுடன் சதமடிக்கும் வாய்ப்பை நழுவி விட்டு 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த மற்றொரு நட்சத்திர அனுபவ வீரர் பால் ஸ்டெர்லிங் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 103 ரன்களும் லார்கான் டுக்கர் 80 ரன்களும் குவித்து அயர்லாந்தை வலுப்படுத்தி ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து வந்த குர்டீஸ் கேம்பர் இலங்கைக்கு தொல்லை கொடுக்கும் வகையில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் அபாரமான சதமடித்து 131 ரன்கள் எடுத்ததால் அயர்லாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸ் 492 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

முரட்டு பேட்டிங்:
இதற்கு முன் 2018இல் பாகிஸ்தானுக்கு எதிராக 393 ரன்கள் குவித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நீங்களே இப்படி அடித்தால் சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த நாங்கள் எப்படி அடிப்போம் என்ற வகையில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சை பயன்படுத்தி அயர்லாந்து பவுலர்களை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக எதிர்கொண்டது.

குறிப்பாக ஆரம்பத்திலேயே நங்கூரத்தை போட்டு 228 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் கருணரத்னே 15 பவுண்டரியுடன் சதமடித்து 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு சதமடித்த நிசான் மதுசங்கா அடுத்து வந்த நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் உடன் இணைந்து அயர்லாந்து பவுலர்களை விழி பிதுங்கும் அளவுக்கு பேட்டிங் செய்து 2வது விக்கெட்டுக்கு 268 ரன்கள் மெகா பார்ட்னர்சிப் அமைத்து ஒரு வழியாக 22 பவுண்டரி 1 சிக்சருடன் 205 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் தன்னுடைய அனுபவத்தைக் காட்டி 6 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100* (114) ரன்கள் விளாசினார். அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட குசால் மெண்டிஸ் 18 பவுண்டரி 11 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 3வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 245 ரன்கள் விளாசி அவுட்டானார். அப்போது இதுவே போதும் என்று கருதியை இலங்கை 704/3 ரன்களில் தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அப்படி மதுஷ்கா 205, கருணரத்னே 115, குசால் மெண்டிஸ் 245, மேத்தியூஸ் 100* என களமிறங்கிய முதல் 4 பேட்ஸ்மேன்களும் சதமடித்தது இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியடை வைத்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் டாப் 4 பேட்ஸ்மேன்களும் சதமடித்த அணி என்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உலக சாதனையையும் இலங்கை சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2007ஆம் ஆண்டு மிர்ப்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 129, வாசிம் ஜாபர் 138, ராகுல் டிராவிட் 129, சச்சின் டெண்டுல்கர் 122* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சதமடித்ததால் இந்தியா முதல் முறையாக அந்த தனித்துவமான உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க:டேட்டிங் பண்ண நேரமில்ல ஒரேடியா கல்யாணம் பண்ணிக்கலாமா? தனஸ்ரீ’யிடம் ப்ரபோஸ் செய்த கதையை பகிர்ந்த சஹால்

அதன் பின் 2019இல் கராச்சியில் இலங்கைக்கு எதிராக ஷான் மசூத் 135, அபித் அலி 174, அசார் அலி 118, பாபர் அசாம் 100* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சதமடித்ததால் பாகிஸ்தான் 2வது அணியாக அந்த சாதனையை படைத்தது. அதைத்தொடர்ந்து இலங்கை அந்த சாதனையை படைத்துள்ள நிலையில் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் அயர்லாந்து 4வது நாள் முடிவில் 54/2 என தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு மெக்கோலம் 10, மூர் 19 என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் பால்பரின் 18*, டெக்டர் 7* ரன்களுடன் போராடி வருகின்றனர்.

Advertisement