வந்துட்டேன்னு சொல்லு, எம்ஜிஆர் ஸ்டைலில் வரும் ஆசிய சாம்பியன் இலங்கை – இந்தியா, ஆஸி அணிகளுக்கு எச்சரிக்கை

SL vs NED
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக அக்டோபர் 16ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் தோல்வியடைந்து அவமானத்தை சந்தித்த ஆசிய சாம்பியன் இலங்கை தன்னுடைய 2வது போட்டியில் அமீரகத்தை தோற்கடித்து மீண்டெழுந்தது. அந்த நிலையில் அக்டோபர் 20ஆம் தேதியன்று ஜீலோங் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்ட அந்த அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 162/6 ரன்கள் குவித்தது.

நிஷாங்கா 14 (21) டீ சில்வா 0 (1) ராஜபக்சா 19 (13) கேப்டன் சனாக்கா 8 (5) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் நங்கூரமாகவும் அதிரடியாகவும் மெண்டிஸ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (44) ரன்கள் குவித்து போராடி கடைசி ஓவரில் அவுட்டானார். நெதர்லாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் மற்றும் டீ லீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 7 (14) டீ லீடி 14 (10) அக்கர்மென் 0 (1) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

போராடி வெற்றி:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓ’தாவுத் நங்கூரமாக நின்று வெற்றிக்காக போராடினாலும் எதிர்ப்புறம் வந்த கூப்பர் 16 (19) கேப்டன் எட்வர்ட்ஸ் 21 (15) பிரிங்கள் 2 (4) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவருக்கு கை கொடுக்காமல் இலங்கையின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி மேலும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனாலும் மறுபுறம் மனம் தளராமல் கடைசி நேரத்தில் அதிரடியை அதிகப்படுத்திய மேக்ஸ் ஓ’தாவுத் அரைசதம் அடித்து 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (53) ரன்கள் குவித்த போதிலும் 20 ஓவர்களில் நெதர்லாந்து 146/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக வணிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இலங்கை முதல் சுற்றில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து குரூப் ஏ புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்தது. அதன் காரணமாக அக்டோபர் 22ஆம் தேதி முதல் துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி தன்னை ஆசிய சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

எம்ஜிஆர் ஸ்டைலில்:
அத்துடன் முதல் சுற்றின் குரூப் ஏ புள்ளி பட்டியலில் ரன் ரேட் அதிர்ஷ்டத்துடன் முதலிடம் பிடித்த அந்த அணி சூப்பர் 12 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் வகிக்கும் முதல் பிரிவுக்கு 5வது அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இதே போல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தோற்றாலும் அதன்பின் கொதித்தெழுந்த இலங்கை இளம் வீரர்களை வைத்து அபாரமாக செயல்பட்டு வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் தோற்கடித்து மாபெரும் பைனலில் மீண்டும் பாகிஸ்தானை தோற்கடித்து 6வது கோப்பையை வென்றது.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையிலும் முதல் போட்டியில் தோற்ற போது தங்களது அணி மீண்டு வருமென்று இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் உறுதியான நம்பிக்கை தெரிவித்தனர். தற்போது அதே போலவே எம்ஜிஆர் ஸ்டைலில் முதலில் அடி வாங்கிய பின்னர் எழுந்து சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு மீண்டும் சவால் கொடுக்க தயாராகியுள்ளது.

மறுபுறம் இப்போட்டியில் தோற்றாலும் முதலிரண்டு போட்டிகளில் வென்ற நெதர்லாந்து இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் நமீபியாவை அமீரகம் தோற்கடித்த அதிர்ஷ்டத்துடன் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் இடம் வகிக்கும் 2வது பிரிவுக்கு 6வது அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement