19 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாயை அடக்கி மக்களின் முகத்தில் புன்னகையை பூக்கவைத்த இலங்கை – முழுவிவரம்

Pathum Nishanka SL vs AUS
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் ஜூன் 7 – 11 வரை இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்களை டி20 சாம்பியன் என்று நிரூபித்தது. அதை தொடர்ந்து ஜூன் 14இல் துவங்கிய ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு 2-வது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை தக்க பதிலடி கொடுத்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

அந்த நிலைமையில் இந்த தொடரின் 3-வது போட்டி ஜூன் 19 மதியம் 2.30 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 291/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் 9 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 10 (23) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

இலக்கு 292:
அதனால் 47/2 என சுமாரான தொடக்கம் பெற்ற அந்த அணிக்கு அடுத்து ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்ய முயன்றபோது லபுஸ்ஷேன் 29 (36) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்த சில ஓவர்களில் போராடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச் அரைசதம் கடந்து 62 (85) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த அலெக்ஸ் கேரி 49 (52) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 33 (18) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

இறுதியில் டிராவிஸ் ஹெட் 70* (65) ரன்களும் கிறிஸ் க்ரீன் 15* (12) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிசிங் கொடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெப்பிரி வண்டெர்சய் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 292 என்ற இலக்கை துரத்திய இலங்கைக்கு நிரோஷன் டிக்வெல்லா 25 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷாங்கா – குஷால் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக ஆஸ்திரேலிய பவுலர்களை எதிர்கொண்டனர். 8-வது ஓவரில் ஜோடி சேர்ந்து பவர் பிளே முடிந்தும் அட்டகாசமாக பேட்டிங் செய்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது.

- Advertisement -

கலக்கிய நிசாங்கா:
ஒரு கட்டத்தில் 30 ஓவர்கள் கடந்தும் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 2-வது விக்கெட்டுக்கு 170 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் 8 பவுண்டரியுடன் 87 (85) ரன்கள் எடுத்திருந்தபோது குசல் மெண்டிஸ் காயமடைந்ததால் முக்கிய நேரத்தில் வெளியேறினார். அந்த நிலைமையில் வந்த டீ சில்வா 25 (17) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த நிசாங்கா 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 137 (147) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து 48-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அஸலாங்கா 13* (12) ரன்கள் எடுத்ததால் 48.3 ஓவரிலேயே 292/4 ரன்களை எடுத்த இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட தொடரை வென்று விடலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்துள்ளது.

2003க்கு பின்:
ஒரு காலத்தில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, மலிங்கா, வாஸ், முரளிதரன் என உலகை மிரட்டிய இலங்கை அந்த ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பின் நல்ல தரமான இளம் வீரர்கள் கிடைக்காததால் கடந்த 2015க்கு பின் கத்துக்குட்டியாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட நிலைமையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரில் மண்ணை கவ்வினாலும் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்துள்ள இலங்கை முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2003 ஜூன் 13க்கு பின் 19 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இலங்கை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். அதிலும் தற்போது பொருளாதார நெருக்கடியால் தினம்தோறும் போராட்டத்தையும் சோகத்தையும் கவலையும் சந்தித்து வரும் இலங்கை மக்களின் முகத்தில் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் இலங்கை அணியினர் உண்மையாகவே புன்னகையைப் பூக்க வைத்ததை நேற்றைய போட்டி நடந்த கொழும்பு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது.

Advertisement