ஆசிய கோப்பை 2022 : அதிர்ஷ்டத்தில் சொதப்பிய பாக், பைனலில் மிகப்பெரிய மேஜிக் நிகழ்த்திய இலங்கை – நடந்தது என்ன

SL vs PAK
Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க 2022 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. அதில் ஹாங்காங், வங்கதேசம், நடப்புச் சாம்பியன் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறின. மறுபுறம் தோல்வியுடன் துவங்கினாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றை கடந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

PAKvsSL

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் 0, நிஷாங்கா 8, குணத்திலகா 1, டீ சில்வா 28, கேப்டன் சனாகா 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 9 ஓவர்களில் 58/5 என படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இலங்கை 100 ரன்களை தாண்டாது என்று அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஹசரங்கா – பனுக்கா ராஜபக்சா ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.

- Advertisement -

இலங்கை மாஸ்:
அதில் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடி காட்டிய ஹசரங்கா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (21) விளாசி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதும் அதிரடியை அதிகப்படுத்திய ராஜபக்சா அதுவரை அற்புதமாகச் பந்துவீசிய பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (45) ரன்களை விளாசி சிறப்பான பினிஷிங் கொடுத்தார். அவருடன் கருணரத்னே 14* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் இலங்கை 170/6 ரன்கள் குவித்து அசத்தியது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹரிட் ரவூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு ஒருபுறம் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்மான் அதிரடி காட்ட மறுபுறம் கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 22/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய இப்திகர் அஹமத் போராடி 32 (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சாம்பியன் அணி:
அப்போது களமிறங்கிய முகம்மது நவாஸ் 6 ரன்களில் நடையை கட்டிய நிலையில் மறுபுறம் வெற்றிக்காக போராடிய முஹம்மது ரிஸ்வான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 55 (49) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதைப் பயன்படுத்திய இலங்கை குஷ்தில் ஷா 2, ஆசிப் அலி 0, சடாப் கான் 8 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து கதையை முடித்தது.

SL vs PAK Babar Azam

ஏனெனில் அடுத்து வந்த வீரர்களும் எவ்வளவோ போராடியும் இலங்கையின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரமோட் மதுசன் 4 விக்கெட்டுகளையும் வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 2022 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

பைனலில் மேஜிக்:
முன்னதாக சங்ககாரா போன்ற ஜாம்பவான்களுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் சமீப காலங்களில் தடுமாறும் இலங்கை தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடுவதால் இந்த தொடரில் பைனலுக்கு கூட வராது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக கொதித்தெழுந்து அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளையும் மண்ணைக் கவ்வ வைத்தது.

அந்த நிலைமையில் இப்போட்டி நடந்த துபாய் மைதானத்தில் டாஸ் வென்று சேசிங் செய்தால் 99% வெற்றி என்ற நிலைமையில் இந்த பைனலில் டாஸ் தோற்ற இலங்கை பேட்டிங்கில் 58/5 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற போதிலும் கடைசி 10 ஓவர்களில் மீண்டெழுந்து 170 ரன்கள் குவித்த போதே பாதி வெற்றியை உறுதியானது. எஞ்சிய வெற்றியை இந்த அழுத்தமான பைனலில் தங்களுடைய தரமான பந்துவீச்சில் முஹம்மது ரிஸ்வான் தவிர பாபர் அசாம் உட்பட அனைத்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களையும் சுருட்டிய அந்த அணி இளம் வீரர்களை வைத்து யாருமே எதிர்பாராத வகையில் 6ஆவது ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட் மறுமலர்ச்சி காணத் துவங்கியுள்ளது என்றே கூறலாம். மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் சொதப்பிய பாகிஸ்தான் வெறும் கையுடன் வெளியேறியது.

Advertisement