ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ஆம் தேதி அபுதாபியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. அதில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் போராடி 169/8 ரன்கள் குவித்தது.
முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 79/6 என சரிந்த அந்த அணிக்கு கடைசி நேரத்தில் பட்டாசாக விளையாடிய முகமது நபி 60 (22) ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக வெல்லலாகே வீசிய கடைசி ஓவரில் மட்டும் தொடர்ச்சியான 5 சிக்சர்கள் அடித்த அவருடன் கேப்டன் ரசித் கான் 24, இப்ராஹிம் 24 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானுக்கு ஓரளவு கை கொடுத்தனர்.
இலங்கை வெற்றி:
இலங்கைக்கு அதிகபட்சமாக நுவான் துஷாரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா 6, கமில் மிசாரா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு சவாலை கொடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் கை கொடுக்கும் முயற்சித்த குசால் பெரேரா 28 (20), கேப்டன் அசலங்கா 17 (12) ரன்களில் அவுட்டானார்கள்.
மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய மெண்டிஸ் அரை சதத்தை அடித்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் லோயர் ஆர்டரில் அசத்திய கமிண்டு மெண்டிஸ் தம்முடையப் பங்கிற்கு 26* (13) ரன்கள் எடுத்தார். இறுதியில் குசால் மெண்டிஸ் 10 பவுண்டரியுடன் 74* (52) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.
வெளியேறிய ஆப்கானிஸ்தான்:
அதனால் 18.4 ஓவரிலேயே 171/4 ரன்களை எடுத்த இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக குரூப் பி பிரிவில் 3க்கு 3 வெற்றிகளைப் பெற்ற இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. கூடவே 3க்கு 2 வெற்றிகளைப் பெற்ற வங்கதேசமும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
இதையும் படிங்க: இந்த காரணத்தால் இங்கிலாந்தில்.. 5 மேட்ச்லயும் பெஞ்சில இருப்பன்னு கம்பீர் சொல்லிட்டாரு.. குல்தீப் பேட்டி
பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்கத் தவறிய அந்த அணிக்கு நூர் அஹ்மத், பரூக்கி, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக நூர் அகமது 3 ஓவரில் 9 ஒய்ட் உட்பட 37 ரன்கள் வாரி வழங்கினார். இதன் வாயிலாக ஆசிய டி20 கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஒயிட் (9) போட்ட வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.



