ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.
இந்நிலையில் நேற்று போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் வீரர்கள் அனைவரும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கு காரணம் யாதெனில் சன் ரைசர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அவரது நெருங்கிய நண்பரும், ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரருமான நஜிப் தரகை அவர் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்த காரணத்தினால் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
அதனை ரஷீத் கானும் போட்டி முடிந்து வெளிப்படுத்தினார். அதுகுறித்து ரஷீத் கான் கூறுகையில் : நஜீப் தரகை என்னுடைய மிகச் சிறந்த நண்பர் மேலும் அவர் நல்ல மனிதரும் கூட. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் அவர் இவ்வுலகை விட்டு சென்றார் என்ற செய்தி கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. அதனால் அவருடைய இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக எங்கள் அணியின் வீரர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர் என்று ரஷீத் கான் தெரிவித்தார்.