
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 41வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 8 ரன்களில் போல்ட் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
அடுத்து வந்த இசான் கிசான் ஒரு ரன்னில் எட்ஜ் கொடுக்காமலேயே வெளியேறினார். அவரை காலி செய்த தீபக் சஹர் அதற்கடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டியையும் 2 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் பவர் பிளே முடிவில் 24/4 என ஹைதராபாத் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவரில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் படைத்தது.
இதற்கு முன் பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 30/3 ரன்கள் எடுத்ததே முந்தைய மோசமான சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அன்கிட் வர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் இந்தப் பக்கம் அதிரடியை நிறுத்தாத கிளாசின் அரை சதத்தை அடித்து ஹைதெராபாத் 100 ரன்களை தாண்டுவதற்கு உதவி மானத்தை காப்பாற்றினார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 71 (43) ரன்கள் எடுத்த போது பும்ரா வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய அபினவ் மனோகர் 43 (37) ரன்கள் எடுத்த போது ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.
அவர்களுடைய ஆட்டத்தால் ஓரளவு தப்பிய ஹைதராபாத் 20 ஓவரில் 143-8 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்கு ட்ரெண்ட் போல்ட் 4, தீபக் சஹர் 2, கேப்டன் பாண்டியா 1, ஜஸ்ப்ரித் பும்ரா 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள். இதைத் தொடர்ந்து 144 என்ற சுலபமான இலக்கை மும்பை துரத்தி வருகிறது.
இதையும் படிங்க: இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்தில் கழற்றி விட்டாலும்.. அந்த வாய்ப்பை மறுக்க முடியாது.. ரவி சாஸ்திரி
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து தமது டி20 கேரியரில் ஜஸ்ப்ரித் பும்ரா 300* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் அந்த சாதனையைப் படைத்துள்ளார்.