ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது நேற்று வரை நான்காம் நாளில் முடிவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்றைய 33வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டிக்கு முன்னதாக சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்று உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த ஆறு நபர்களையும் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் தனிமைப்படுத்தியது. இதன் காரணமாக நேற்றைய போட்டி நடைபெறுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மேலும் இனி வரும் போட்டிகளும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்று தற்போது ஆராயப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அந்த அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அந்த பிறந்தநாளின் போது கேக் மற்றும் இதர பர்த்டே கொண்டாட்டங்களுக்கான அனைத்தும் ஏற்பாடுகளும் வெளியில் இருந்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி வெளியிலிருந்து நிகழ்ந்த கனெக்ட் மூலம் நடராஜனுக்கு கொரோனா பரவி இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற போது பயோ பபுள் வளையத்திற்குள் புகுந்த கொரோனா வைரஸ் வருண் சக்கரவர்த்திக்கு வந்தது. அதேபோன்று தற்போது நடராஜனுக்கு வந்துள்ளதால் பல்வேறு கேள்விகளை இந்த விவகாரம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



